தற்போதைய செய்திகள்

கோவை மேற்கு புறவழிச்சாலை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை
கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கழக கொறடாவும், தொண்டாமுத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்திலே மேற்கு புறவழி சாலைக்காக 400 கோடி ரூபாய் நிதி முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரால் ஒதுக்கப்பட்டு நில எடுப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சாலை பாலக்கோடு மதுக்கரை சுகுணாபுரத்தில் ஆரம்பித்து பெரியநாயக்கன்பாளையம் அருகில் இருக்கக்கூடிய நரசிம்மநாயக்கன் பாளையம் வழியாக அந்த சாலை போகிறது. நில எடுப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது வேகம் குறைந்து பணிகள் நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம். அதுபோல இதனை மூன்று கட்டங்களாக பிரித்திருந்தோம். அமைச்சர் பேசும்போது முழுமையாக நிலம் எடுத்த பின்னர் தான் சாலை அமைக்கப்படும் என்றார்.
இது பல சாலைகளை இணைக்கும் சாலை. மருதமலை உட்பட பல சாலைகள். ஆகவே இதனை மூன்று கட்டங்களாக நில எடுப்பு எடுத்த வரை சாலையை ஒவ்வொரு கட்டமாக போட்டால் நன்றாக இருக்கும்.

நீதிமன்றம் கூறியவாறு நில எடுப்பை எப்படியும் நாம் எடுத்து விடுகிறோம். எனவே மூன்று கட்டங்களாக போட வேண்டும். இதன் மூலம் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களும், கேரளாவை சேர்ந்தவர்களும், நீலகிரி செல்வதற்கு ஏதுவாக, சுலபமாக இருக்கக்கூடிய சாலை. இந்த பணியை வேகமாக முடித்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக கொறடாவும், தொண்டாமுத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.