சிறப்பு செய்திகள்

மக்களிடம் உண்மைகளை மறைத்து பொய் பேசி வெற்றிபெற முடியாது-ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சாட்டையடி

சென்னை

மக்களிடம் உண்மைகளை மறைத்து பொய் பேசி வெற்றி பெற முடியாது என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி சாட்டையடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு மற்றும் சிடிசி கார்னர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து பேசியதாவது:-

பொன்முடி பேசுகிறார், எங்கள் தலைவர் சவாலுக்கு தயார் என்று. சும்மா அறிக்கை விட்டால் மட்டும் போதாது, வா, எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் வருகிறேன். வாருங்கள் என்று கூப்பிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது வாபஸ் வாங்கி விட்டு வா என்கிறார்கள். அந்த வழக்கைப் பற்றி நான் இந்த இடத்தில் விளக்க கடமைப்பட்டிருக்கின்றேன்..

எங்கள் ஆட்சியில் ஒரு டெண்டர் விடுகிறார்கள், ஒளிவு மறைவற்ற டெண்டர். தி.மு.க ஆட்சியில் டெண்டர் என்றால் ஒரு பெட்டியை வைத்து விடுவார்கள். அதில் யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டுமே அவருக்கு மட்டுமே செட்யூல் கொடுப்பார்கள்.

அவர்கள் மட்டுமே அந்த பெட்டியில் கொண்டு வந்து போடுவார்கள். ஆனால், எங்கள் அரசாங்கத்தில் மாநிலத்தில், இந்தியாவில் ஏன் உலகத்தில் எங்கு இருந்தும் கூட ஆன்லைன் மூலம் தகுதியுள்ள அனைவரும் டெண்டர் போடலாம்.

ஒளிவு மறைவற்ற இ-டெண்டர். அதில் எப்படி தவறு நடக்கும். உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு போகிறது, அந்த நீதிபதி இதை விசாரித்து மூடிய கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவு இடுகிறார்கள். அவரும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்கிறார். அதை படிக்காமல் சி.பி.ஐ. விசாரனைக்கு உத்தரவு இடுகிறார்.

இதை எதிர்த்துத்தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அங்கே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த விசாரனை அறிக்கையினை படித்துவிட்டோம் எனக் கூறி அதற்கு தடையாணை வழங்குகிறார்கள்.

இதில் என்ன தவறு உள்ளது. தி.மு.க ஆட்சியில் பாக்ஸ் டெண்டர். கழக ஆட்சியில் இ-டெண்டர். ஒளிவுமறைவற்ற டெண்டர் தகுதியானவர்கள் விண்ணப்பித்து குறைந்த புள்ளி கோரியவர்களுக்கு வழங்கப்படும் டெண்டர். இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்று தடையாணை வழங்கியுள்ளார்கள்.

தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.210 கோடி ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டு, பணி நிறைவுபெறும் போது அதற்காக கொடுத்த தொகை ரூ.430 கோடி இதுதான் ஊழல். இதை விசாரிக்க உத்தரவு போட்டால், ஸ்டாலின் போய் தடையாணை வாங்குகிறார்.

அவர் தடையாணை பெற்றுக் கொண்டு நம் மீது பழி சுமத்துகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள் தி.மு.கவினர். மக்களிடம் எடுபடாது. இது நவீன உலகம், விஞ்ஞான உலகம். மக்களிடத்தில் உண்மையை மறைத்து பொய் பேசி வெற்றி பெற முடியாது. நாங்கள் உண்மையை பேசுகிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.