உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கேள்வி
சென்னை
உடுமலைப்பேட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மடத்துக்குளம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் பேசியதாவது:-
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளது.அதில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 35 ஊராட்சிகளும் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 ஊராட்சிகளுக்கும், உடுமலைப்பேட்டை நகராட்சி மையமாக உள்ளது.
உடுமலை நகராட்சி 1984-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தரம் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்று, மேலும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு சுகாதாரமான நகரமாக உள்ளது.
இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள எனது மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணக்கம்பாளையம், போடிப்பட்டி, ராகல்பாவி, பூலாங்கிணறு ஊராட்சிகள் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகோட்டை, சின்னவீரன்பட்டி, குறிஞ்சேரி ஆகிய ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவுபடுத்தி புதிய உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக உருவாக்க அரசு முன்வருமா?
மேலும் உடுமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி கொடுக்கும் பட்சத்தில் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு உடுமலைப்பேட்டை மாவட்டம் அமைக்க முன்வருமா என்றும், புதியதாக மடத்துகுளம் தாலுக்கா உருவாக்கப்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 5 பேரூராட்சிகள் உள்ளது. தொகுதியின் தலைமையிடமாக கொண்டு மடத்துக்குளம் தேர்வுநிலை பேரூராட்சி செயல்பட்டு வருகிறது.
மடத்துக்குளம் பேரூராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் அதன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியை விரிவுபடுத்தி புதிய மடத்துக்குளம் நகராட்சியாக உருவாக்க அரசு முன்வருமா?
இவ்வாறு சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.