தற்போதைய செய்திகள்

324 கிராமங்களில் தொடர் திண்ணை பிரச்சாரம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கினார்

மதுரை

கழக அம்மா பேரவை சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கு 100 சதவீதம் வெற்றியை பெற்றுத்தர கழக அம்மா பேரவை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதற்காக 100 ஆண்டுகள் பேசும் அம்மா அரசின் சரித்திர சாதனைளை விளக்கி கூறி திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடர் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை இலக்காக கொண்டு தீவிர களப்பணியாற்ற கழக அம்மா பேரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி மதுரை திருமங்கலம் தொகுதியில் 324 கிராமங்கள் 27 நகராட்சி வார்டுகள், 30 பேரூராட்சி வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அம்மா அரசின் சரித்திர சாதனைகளை விளக்கி தொடர் திண்ணை பிரச்சாரத்தை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று தொடங்கினார்.

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த எட்டு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவரது வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

எனக்கு பின்னால் கழகம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் இறுதியாக லட்சிய முழக்கமிட்டார். அவரது லட்சியத்தை நனவாக்கும் வகையில் இன்றைக்கு முதலமைச்சர் தமிழக மக்களுக்காக நூறாண்டுகள் பேசும் பல்வேறு சாதனை திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார். இதற்கு துணை முதலமைச்சர் துணையாக இருக்கிறார்.

இன்றைக்கு மருத்துவ உலகில் உலக நாடுகளே வியக்கும் வகையில் பல்வேறு சரித்திர சாதனைகளை முதலமைச்சர் படைத்து வருகிறார். குறிப்பாக கொரோனா காலத்தில் தன் உயிரையும் துச்சமென நினைத்து 32 மாவட்டங்களுக்கு நேரடியாக நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு அறிவுரை வழங்கினார்.

இதன்மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பாரதப் பிரதமரே முதலமைச்சரை பாராட்டினார். அதுமட்டுமல்லாது கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்களும் மருத்துவ வசதி பெற வேண்டுமென்பதற்காக தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இதுபோன்ற திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

குக்கிராமத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கும் வகையில் யாரும் கோரிக்கை வைக்காத நிலையில் சட்டமன்றத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். இந்த அறிவிப்பின் மூலம் இன்றைக்கு 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது மாணவர்களின் கல்வி கட்டண செலவை அம்மா அரசு ஏற்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை தமிழகத்தில் முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இதன்மூலம் அடுத்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

2017-ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டபோது விவசாய பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக முதலமைச்சர் வழங்கினார். தற்போது வேளாண் பெருமக்களின் மீது அக்கறை கொண்டுள்ள அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சர் இடுபொருள் உதவித்தொகையாக 1,717 கோடி ரூபாயை வழங்கினார்.

இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். மேலும் கடந்த 5-ந் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு தைத்திருநாளில் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு மற்றும் அரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார்.

கடந்த 4 ஆண்டுகளில் நூறாண்டு பேசும் சரித்திர சாதனைகளை முதலமைச்சர் படைத்துள்ளார். குறிப்பாக இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த 10 ஆண்டில் மட்டும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.80,000 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,85,071 கோடி அளவில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல கொரோனா தொற்று காலத்தில் ரூ.86,478 கோடி அளவில் இந்தியாவில் தொழில் முதலீட்டை ஈர்த்த ஒரே மாநிலம் தமிழகம் தான். அதுமட்டுமல்லாது இந்தியாவில் வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

நிதி ஆயோக் அறிக்கைப்படி தமிழகத்தில் வறுமை விகிதம் 17.1 சதவீதத்திலிருந்து 10.95 சதவீதமாக குறைந்து உள்ளது. மேலும் தமிழகத்தின் தனிநபர் வருமானம் உயர்ந்து உள்ளது. 30 சதவீதமாக இருந்தது தற்போது 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, தோப்பூர் துணைக்கோள் நகரம், திருமங்கலம் தொகுதியில் புதிய கோட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்பட மக்களின் அனைத்து தேவைகளையும் 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம்.

தற்போது ஸ்டாலின் ஊர் ஊராக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் நேரத்தில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம் என்று கூறுவார். எதையும் நம்பக்கூடாது. ஏனென்றால் கடந்த திமுக ஆட்சியில் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறினார்கள் யாருக்காவது கொடுத்தார்களா? மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகள் அளித்தனர்.

ஏதாவது ஒன்றைக்கூட நிறைவேற்றினார்களா? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களுக்கு தேவையான தேவைகளை 100 சதவீதம் நிறைவேற்றி வரும் அம்மா அரசுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை 100 சதவீதம் இரட்டைக் இலைக்கு அளித்து மாபெரும் வெற்றியை தருமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மேற்கண்ட அரசின் சாதனைகளை கூறி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.