தற்போதைய செய்திகள்

மீன்வலை பின்னும் கூடம் அமைக்கப்படுமா?

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கேள்வி

சென்னை
வேதாரண்யம் தொகுதி, வானவன்மகாதேவி கிராமத்தில் மீன்வலை பின்னும் கூடம் அமைத்து தர வேண்டும்.என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

வேதாரண்யம் தொகுதி, வானவன்மகாதேவி கிராமத்தில் மீன்வலை பின்னும் கூடம் மற்றும் மீன் உலர்க்கூடம் அமைக்க அரசு முன் வருமா? வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் தான் அந்த வானவன் மகாதேவி கிராமமும் சேர்ந்தது.

தற்போது ரூ.100 கோடியில் துறைமுகம் ஒன்று அங்கு தயாராகி கொண்டிருக்கிறது. அதனை அமைச்சரும் நேரில் வந்து பார்வையிட்டார். ஆனால் கடந்த 6 மாதமாக அந்த பணிகள் துளி கூட நடைபெறாமல் அப்படியே நின்று போயிருக்கிறது. அந்த பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா?

என்னுடைய தொகுதியில், கஜா புயலிலிருந்து இன்று வரை தொடர்ந்து கடல் சேர் களியை (மண்) மீன்பிடிக்கிற அந்த துறைமுக வாசலில் வந்து தங்கி விடுகிறது. இதுவரையிலிருந்து 1 கிலோ மீட்டர் வரையில் அந்த மண் தேங்கி இருக்கிறது. இதனால் படகுகளை உள்ளே எடுத்து செல்ல இயலவில்லை. அதேபோன்று மீன் பிடித்துவிட்டு கடலில் இருக்கின்ற படகை கரைக்கு உரிய நேரத்தில் கொண்டு வர இயலவில்லை. அலை எப்போது ஓங்கி அடிக்கிறதோ, அந்த நேரத்தில் தான் எடுத்து வரவும் போகவும் முடிகிறது.

இது அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பிரச்சினையில் அந்த களியை நீக்கி
ஒரு வாய்க்காலாவது அமைத்து கொடுத்து, படகுகள் கரையிலிருந்து கடலுக்கும், கடலுக்குள் இருக்கிற படகுகள் கரைக்கும் வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பேசினார்.