தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு விரைவில் இலவச பட்டா-அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தகவல்

நாமக்கல்

விவசாயிகளுக்கு விரைவில் இலவச பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்தார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற மக்களை தேடி சிறப்பு குறை தீர்க்கும் முகாமை கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா தொடங்கி வைத்து பொது மக்களிடமிருந்து முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், குடிநீர் வசதி, சிமெண்ட் சாலை அமைத்தல், வேலைவாய்ப்பு, தொழிற்கடன், ஆவின் பாலகம் அமைத்தல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொது மக்களிடமிருந்து பெற்ற மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமை வகித்தார்.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் 15 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,500 வீதம் ரூ.7,000 மதிப்பில் காதொலி கருவிகளையும், 2 மாற்றுத்தினாளிகளுக்கு தலா ரூ.62,000 வீதம் ரூ.1,24,000 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஊட்டசத்து கருத்து கண்காட்சியனை அமைச்சர் பார்வையிட்டார்.

முன்னதாக ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்து அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-

ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.1,013 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட பகுதிகளையும் சேர்த்து திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

மேலும் ராசிபுரம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு முதலமைச்சரால் 04.02.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் அப்பணிக்காக பழுதடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
பொதுமக்கள் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வேலைவாய்பு இல்லாமல் பணிக்கு செல்லாமல் இருந்தனர்.

அதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ரூ.2500 பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினார். ராசிபுரம் நகராட்சியில் விரைவில் 4,144 நிலுவையில் உள்ள நத்தம் பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது.

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.16 கோடி மதிப்பில் 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாரைக்கிணறு, மங்களபுரம், மத்துருட்டு, திம்மநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 2,233 ஏக்கர் நிலங்களை அளந்து 1,000 விவசாயிகளுக்கு விரைவில் இலவச பட்டா வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அசோக்குமார், நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, ராசிபுரம் நகர கழக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பாலசுப்ரமணியன், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் எஸ்.பிரபாகரன், ராசிபுரம் வட்டாட்சியர் கி.பாஸ்கரன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் திருமுருகன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.