தற்போதைய செய்திகள்

நமது ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த சக்திக்கும் இடம் கொடுக்கக்கூடாது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை,

நமது ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த சக்திக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்று கோவையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலை விரிவுபடுத்தும் பணிக்காக வீடுகள் இடிக்கப்படும் போது தெற்கு உக்கடம் பைபாஸ் ரோடு மஜித் காலனியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பள்ளிவாசலை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி இஸ்லாமிய மக்கள் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் வேறு இடத்தில் பள்ளிவாசல் கட்ட இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின்படி கோவை புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் முன்புறம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

இந்த புதிய பள்ளி வாசலை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கழக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் என்னிடம் பள்ளிவாசலுக்கு மட்டும் இடம் கேட்கவில்லை. இந்துகளுக்காக கோயில் கட்டுவதற்கும் இடம் கேட்டார்கள். இந்த சகோதரத்துவ ஒற்றுமைதான் முக்கியம். இந்த ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த சக்திக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாது.

கோவை சுகுணாபுரம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான இடத்தை ஒதுக்கி நானே முன்னின்று அனைத்து வசதிகளுடனும் கட்டி முடிக்கப்பட்ட கபர்ஸ்தானை சமீபத்தில் இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கழக ஆட்சியில்தான் முதன் முறையாக சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. நான் என்றும் உங்கள் சகோதரன் தான். கொள்கை வேறு கூட்டணி வேறு என்பதை தமிழக முதல்வர் உறுதியுடன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காகத்தான் கூட்டணியே தவிர, எங்கள் கொள்கையில் என்றுமே மாற்றுக்கருத்து இருக்காது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

விழா முடிவில் இஸ்லாமிய மக்களின் சார்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.