தற்போதைய செய்திகள்

மதுரை ஒத்தகடை வேளாண் கல்லூரியில் கோவிட் கேர் சென்டர் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

மதுரை

மதுரை ஒத்தகடை வேளாண்மை கல்லூரில் உள்ள கோவிட் கேர் சென்டரை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

மதுரை மாவட்டம் என்பது தென்தமிழகத்தின் தலைநகர் போன்றது. விமானம் மூலமாகவும் புகைவண்டி மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து அனுமதிபெற்று வரக்கூடியவர்களையும், அனுமதி இல்லாமல் வரக்கூடியவர்களையும் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள விஜிலென்ஸ் கமிட்டி மூலமாக கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது.

முதலமைச்சர் ஊரடங்கை பிறப்பித்து எங்களுக்கு கொடுத்திருக்கும் அறிவுரை என்னவென்றால் வீடு வீடாக சென்று ஆரம்ப நிலையிலேயே இந்த நோய்த்தொற்றை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் 1400 கண்காணிப்பு பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சிக் கொடுத்து ஒரு நாளைக்கு 100 வீடுகள் என்ற அளவில் 300 வீடுகள் இலக்காக கொண்டு 3 நாளிலிருந்து 5 நாட்களுக்குள் ஆரம்ப நிலையில் கண்டறிகின்ற பணியையும், 100 சதவீதம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பணியையும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களும், 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும் எந்த அவசியத் தேவையாக இருந்தாலும் 100 சதவீதம் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைக்கு வருவதைத் தவிர வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசு அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள கை சுத்திகரிப்பு தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது நிறுவனங்களுக்கும் மாநகராட்சியின் மூலம் வழங்கப்படும்.

வருமுன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் நாம் பணியாற்றி வருகிறோம். பரிசோதனையை அதிகப்படுத்தி அதன் மூலம் நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறிந்து குணப்படுத்துவது தான் ஊரடங்கின் முக்கிய நோக்கம். அதற்காகத்தான் மருத்துவப் பரிசோதனை நாள் ஒன்று 2000 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2500 கண்காணிப்பு பணியாளர்கள் தீவிரமாக வீடு வீடாக சென்று களப்பணியை செய்து வருகின்றனர்.

மேலூர் மீனாட்சி மிஷின் நர்சிங் கல்லூரி, மதுரை தெற்கு கூட்டுறவு பயிற்சி மையம், மதுரை மேற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், விருந்தினர் மாளிகை, திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி மற்றும் விருந்தினர் மாளிகை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கள்ளிக்குடி காமராஜர் பொறியியல் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கலைக்கல்லூரி, மதுரை கிழக்கு என்சிசி பயிற்சி மையம், மீனாட்சி அரசு பெண்கள் கலைக்கல்லூரி, பாத்திமா பெண்கள் கலைக்கல்லூரி, லதாமாதவன் பொறியியல் கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கலைக்கல்லூரி, கிருஷ்ணா கல்லூரி, யாதவா ஆண்கள் கலைக்கல்லூரி, யாதவா பெண்கள் கலைக்கல்லூரி, திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள், பராசக்தி கல்லூரி, லேடிடோக் பெண்கள் கலைகல்லூரி, அருளானந்தர் கலைக்கல்லூரி, மேலூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய கோவிட் கேர் சென்டர்களில் தேவையான படுக்கைகள், தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு இணையாக மதுரை மாவட்டத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாழ 35 லட்சம் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். 1477 பேர்கள் வெளியிலிருந்து வந்தவர்களில் 553 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையில் குணமடைந்தவர்கள் 94 சதவிகிதமாகும். கடந்த ஆண்டு பிறநோய்களால் இறந்தவர்களை விட இந்த ஆண்டு குறைவு.

அரசு இராஜாஜி மருத்துவமனையில் 1400 படுக்கைகளும், மருத்துவர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளன. மற்ற அரசு மருத்துவமனைகளில் 432ம், வேலம்மாள் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, வடமலையான் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் கோவிட்-19க்காக 714 படுக்கைள் என மொத்தம் 2546 படுக்கைகள் சிகிச்சை அளிக்கக்கூடிய அனைத்து மருத்துவ உபகரணங்களோடு தயார் நிலையிலே உள்ளது. கோவிட் கேர் சென்டரில் 2050 படுக்கைகளுடன் என மொத்தம் 4500 படுக்கை வசதி உள்ளன.

இங்கு நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு மன அழுத்தம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், வீட்டிலே இருப்பது போன்ற உணர்வு வரவேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. நோய்த்தொற்று உள்ளவர்கள் தங்கள் வீட்டிலேயே தனி அறை, தனி கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன.

ஆகையால் தாங்கள் தங்கள் இல்லங்களிலே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என தெரிவித்தால் அதை மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து முடிவு எடுக்கும். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் செய்யப்படுகிறது. நாளைய தினம் அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட பொதுமக்கள் எங்களுக்கு ஏற்கனவே வழங்கிய ஒத்துழைப்பை போலவே நாளையும் ஒத்துழைப்பு வழங்கினால் நோய்த்தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை) ப்ரியங்கா பங்கஜம்,மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரவி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, துணை இயக்குநர்(சுகாதாரம்) பிரியாராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.