தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைப்பீர்

கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

மும்பை, ஏப். 27-

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தாராவியில் மாநில கழக செயலாளர் ஆர்.கணேஷ் தலைமையில் கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களான கழக அம்மா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., மாநிலங்கவை உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மும்பை வாழ் தமிழர்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தனர். அதேபோல் கழக ஒருங்கிணைப்பாளர்களும் உங்கள் மீது பற்றும் பாசம் வைத்துள்ளனர். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளது. 17.10.1972 அன்று இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். அப்போதே மராட்டிய மாநிலத்திலும் கழகம் தொடங்கப்பட்டது. மும்பையில் உள்ள தமிழர்களுக்கு கழக தொண்டர்கள் பல்வேறு சேவை செய்து மக்களின் நன்மதிப்பை பெற்று வருகின்றனர். அதனால் தான் இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் நம் இயக்கத்தின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பின் இந்த இயக்கத்தை கண்ணை இமை காப்பது போல கழக ஒருங்கிணைப்பாளர்கள் காத்து வருகின்றனர். அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார். அம்மா அவர்கள் வகுத்து கொடுத்த பாதையை அடிபிறழாமல் பின்பற்றி மூன்றாம் பெரிய இயக்கமாக கழகத்தை உருவாக்கிடும் வகையில் ஒருங்கிணைப்பாளர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர்.

இந்திய அளவில் எடுத்துக்காட்டாக திகழும் வகையில் நமது இயக்கம் உள்ளது. இந்த இயக்கம் நமக்கு என்ன செய்தது என்பதை காட்டிலும், நாம் இந்த இயக்கத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பதை நினைவில் கொண்டு வருகின்ற தேர்தல் காலங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர், மாமன்ற உறுப்பினர் பதவிகளை கழகம் பெற்றது என்ற வரலாற்றை உருவாக்கிட அயராது களப்பணி ஆற்றிட பொன்விழா ஆண்டின் சபதமாக மேற்கொள்ளுங்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.