தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியயோருக்கு நலத்திட்ட உதவி

மகளிரணிக்கு மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள்

கோவை

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட மகளிரணிக்கு மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இதயதெய்வம் மாளிகையில் மகளிரணி செயலாளர் லீலாவதி உண்ணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்த நாள் விழாவை கோவையில் பகுதி, நகர, ஒன்றிய, கிளை கழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கழகக் கொடியை ஏற்றி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் கழக அரசின் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கி திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த 6 ஆண்டுகளில் கோவை மாவட்டம் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்துள்ளார்.

குறிப்பாக கோவை அரசு மருத்துவமனை விரிவாக்கம், மேம்பாலங்கள், சாலைகள், சாக்கடை வசதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழக அரசின் சாதனைகள் தொடர வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. பேசினார்.

முடிவில் சுங்கம் பகுதி செயலாளர் ரதிதேவி நன்றி கூறினார்.