தற்போதைய செய்திகள்

கோவில்பட்டி தொகுதியில் 8 இடத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு-அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் 8 இடங்களில் அம்மா மினி கிளினிக் சேவையை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோணுகால், வெங்கடேஷ்வரபுரம், கரடிகுளம், தளவாய்புரம், தலையால்நடந்தான்குளம், முடுக்கலாங்குளம், காமநாயக்கன்பட்டி, பாண்டவர்மங்கலம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு, அம்மா மினி கிளினிக்குகளை துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை நிறைவேற்றியதால் இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது சுகாதாரத்திலும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

கொரோனா தொற்றின் காரணமாக உலகமே முடங்கி போன நிலையில் வளர்ந்த நாடுகள் கூட அதிகமான உயிரிழப்புகளை சந்தித்த நேரத்தில் முதலமைச்சரின் சீரிய திட்டங்களாலும், தகுந்த நடவடிக்கைகளாலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா தொற்று காலத்திலும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று களப்பணி ஆற்றிய ஒரே முதல்வர் நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தான்.

முதல்வர் கிராமப்புறங்களிலும் சுகாதார கட்டமைப்பை மேலும் மேம்படுத்திட தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகளை திறக்க உத்தரவிட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க மொத்தம் 51 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.