தற்போதைய செய்திகள்

தி.மு.க. விரைவில் சுக்கு நூறாக உடையும்-அமைச்சர் செல்லூழ் கே.ராஜூ உறுதி

மதுரை

தி.மு.க. விரைவில் சுக்கு நூறாக உடையும் என்று அமைச்சர் செல்லூழ் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அரசின் சாதனை விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மாவட்ட பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

கடந்த 5-ந்தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த வேளாண் பெருங்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டனர். முல்லை பெரியாறு, காவேரி போன்றவற்றில் இழந்த உரிமையை மீட்காமல் பதவி சுகத்திற்காக காவு கொடுத்தனர். ஆனால் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி அதை மீட்டுத்தந்து மீண்டும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அம்மாவின் அரசு.

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு பொய்யான வாக்குறுதி கொடுப்பார்கள். மக்களாகிய நீங்கள் நம்பக்கூடாது. கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

ஏதாவது ஒன்றை நிறைவேற்றினார்களா? ஆனால் இன்றைக்கு வாக்குறுதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் ஒரே அரசு அம்மா அரசு.

100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்ப்பேன் என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றிபெற்ற திமுக-காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? இன்னும் 100 நாட்களுக்கு பின் ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை இழந்து திமுக சுக்குநூறாக உடைந்தது என்ற வரலாறு நிச்சயம் உருவாகும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.