தற்போதைய செய்திகள்

அப்பாவி மக்களிடம் நிலத்தை அபகரித்த கட்சி தி.மு.க. -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

அப்பாவி மக்களிடம் நிலத்தை அபகரித்த கட்சி தி.மு.க. என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் அம்மா திருக்கோயிலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 1065 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று அம்மாவின் அரசு செயல்பட்டு கொண்டு வருகிறது.

முதலமைச்சர் வழிகாட்டுதலோடு மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேங்காய்களை சந்தைப்படுத்துவதற்கு கோரிக்கை வந்த போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மைத்துறை எடுத்த முயற்சியிலே சாதித்து காட்டி தற்பொழுது வேளாண்மை உற்பத்தியிலும், அதை சந்தைப்படுத்துவதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது.

இது அரசு விழாவாக இருந்தாலும் மக்களுக்கு நான் ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடந்த 2006ல் திமுக தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக தருவோம் என்று கூறி மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாது, அப்பாவி மக்களிடமிருந்து 5,193 ஏக்கர் நிலங்களையும், 35,78,000 சதுர அடி வீட்டுமனைகளையும் திமுகவினர் கபளீகரம் செய்தனர்.

பின்னர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிலஅபகரிப்பு தொடர்பாக 3,264 புகார்கள் வந்தன. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு 5 வருடத்துக்கு முன்பு ஏறத்தாழ 3,678 கோடி ரூபாய் ஆகும்.

இந்த தகவலை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 28.4.2016 அன்று மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு கூறினார். ஆகவே உங்கள் மீது எப்பொழுதும் அக்கறை கொண்டிருக்கும் இந்த அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் நல் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.