தடையை நீக்கி, “ஜல் ஜல்” என்று ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டியது கழக அரசு – பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, “ஜல் ஜல்” என்று ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டியது கழக அரசு என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிக வரித்துறை அமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வணிக வரித்துறை அமைச்சர் தவறான பதிவை இந்த சட்டமன்றத்திலே பதிவிட்டு கொண்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு.
தி.மு.க.வும் காங்கிரசும் மத்திய அரசில் ஆளுகின்றபோதுதான் காளை என்ற இனத்தை விலங்கின பட்டியலில் சேர்த்தார்கள். அதன் காரணமாகத்தான் இந்த ஜல்லிக்கட்டினை நடத்தக்கூடாது என்ற தடையினை விதித்தது மத்திய அரசு. அதுதான் உண்மை.
அதிலிருந்து தான் விடுதலை பெறுவதற்காக கழக ஆட்சியின்போது பிரதமரை சந்தித்து முறையிட்டதன் அடிப்படையில் தான், அவர்கள் உரிய அரசாணை தந்தார்.
அந்த அரசாணையை பெற்றுக்கொண்டு இங்கு வந்து சட்டமன்றத்திலே தீர்மானமாக நிறைவேற்றி மீண்டும் அதை எடுத்து சென்று, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அதற்கு பின்பு தான் ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வு தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்பட்டது என்பது தான் வரலாறு.
இந்த வரலாற்றை மறைத்து நீங்கள் எதையோ சொல்கிறீர்கள். தி.மு.க.வும் காங்கிரசும் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது தான் காளை என்ற இனத்தை விலங்கின பட்டியலில் சேர்த்தார்கள். அதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதுதான் உண்மை வரலாறு. காங்கிரசும், தி.மு.க.வும் மத்திய அரசில் அங்கம் வகித்த போது காளை என்ற இனத்தை விலங்கின பட்டியலில் சேர்ப்பதற்கு முன்னாள் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தது.
1000 ஆண்டுகளாக இந்த ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தது. அதை யாறும் மறுக்க முடியாது. நாங்கள் வசிக்கும்
பெரியகுளம் பகுதியில் கூட ஜல்லிக்கட்டு நடக்கும். அதனை பார்த்திக்கிறோம். நாங்கள் இளம் வயதில் காளைகளாக இருந்த போது ஜல்லிக்கட்டு நடக்கும் போது அந்த காளைகளை அடக்கியிருக்கிறோம்.
ஆனால் காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியாக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தான் காளை என்ற இனத்தை விலங்கின பட்டியலில் சேர்த்ததன் பிறகுதான் அதன் அடிப்படையில் இதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுதான் வரலாறு. மீண்டும் ஜல்லிக்கட்டு ஜல் ஜல் என்று நடப்பதற்கு காரணம் கழகம் தான்.
இவ்வாறு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.