மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கோரிக்கை
சென்னை
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வாணியம்பாடி கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் பேசியதாவது:-
வாணியம்பாடி தொகுதி புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் மையப் பகுதியாகும். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்டத்தில், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியாகும். இந்த பகுதியில் ஆம்பூர், மற்றும் வாணியம்பாடி தொகுதியில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளாக தோல் தொழிற்சாலைகள் நல்ல நிலையில் இல்லை. இதற்காக தோல் தொழிற்சாலை
மற்றும் தோல் சம்பந்தமாக தொழிற்பேட்டை வேண்டும். மல்லகுண்டா ஊராட்சியில் 2,500 ஏக்கருக்கும் மேற்பட்ட இடம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் 500 ஏக்கர் நிலம் உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி மற்றும் ஆம்பூர் தொகுதியின் முக்கிய தொழிலாக தோல் தொழில் தான் உள்ளது. இந்த தோல் தொழிலுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் அளவிற்கு செலவினம் இருப்பதால், தோல் தொழிற்சாலை,
கிட்டத்தட்ட கடந்த காலங்களில், நான்கு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டையிலிருந்து அதிகமாக, இந்தியாவிலேயே 37 சதவிகிதம் வேலூர் மாவட்டத்திலிருந்து தான் தோல் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படும் தோல் ஏற்றுமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது.
இப்போது, நான்கு வருடங்களாக, இதற்கான செலவினம் அதிகமானதால் சிறு தொழிற்சாலைகளெல்லாம் மூடப்படும் நிலையிலும், பெரிய தொழிலதிபர்கள் கூட கைவிடும் நிலையில் இருப்பதால் அவர்கள் செலவினத்தை மானியம் மூலம்
ஏற்க வேண்டும்.
இவ்வாறு கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் பேசினார்.