சிறப்பு செய்திகள்

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை

சென்னையில் தீவிபத்து ஏற்பட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் உரிய அறிவுரைகள் வழங்க அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அம்மா அவர்கள் இருக்கும் போது இம்மருத்துவமனையில் அதிநவீன டவர்-1 மற்றும் டவர்-2 பிளாக்குகளும் கட்டப்பட்டது. அம்மாவின் அரசில் டவர்-3 பிளாக்குகள் கட்டப்பட்டு நோயாளிகளுக்கு நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று (27.4.2022) காலை முகக்கவசம், கையுறை, பிபிஇ கிட், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற பொருட்களை சேமித்து வைத்து இருக்கும் சேமிப்பு கிடங்களில் தீப்பற்றியது என்றும், இது மளமளவென பரவி கட்டிடத்தின் மேலே உள்ள தளங்களுக்கு பரவி, அங்குள்ள நோயாளிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

தீவிபத்து காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 5 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் அங்கு ஏற்பட்ட புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. தீயணைப்பு இயந்திரங்கள் அங்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியே பரபரப்பாக விளங்கியது.

நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இவ்விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஜெகன்மூர்த்தியார் உள்ளிட்ட 10 கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்கள் எங்களுக்கு உணவு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உணவு, ரொட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை நோயாளிகளுக்கு வழங்கினார்கள்.

வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் உரிய அறிவுரைகள் வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.