தமிழகம்

கொரோனா நோய் தொற்று நேரத்தில் மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில்அரசு கவனமாக நடவடிக்கை எடுத்துவருகிறது – முதலமைச்சர் பேச்சு

சென்னை

கொரோனா நோய் தொற்று நேரத்தில் மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் அரசு கவனமாக நடவடிக்கை எடுத்துவருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது-

தமிழகத்தில் இந்த நோய்ப் பரவல் ஏற்பட்டவுடன், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அரிசி பெறுகின்ற ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டது. விலையில்லா அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு ஆகியவை தொடர்ந்து மூன்று மாத காலம் வழங்கப்பட்டன. இப்பொழுது மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து தொடர்ந்து நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அவர்களுக்கும் விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவுடன், அரசே அதன்முழு செலவையும் ஏற்றுக் கொண்டு ரயில் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தில் எந்த விதத்திலும் மக்கள் பாதிக்கக்கூடாது என்று அரசு கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அம்மா உணவகத்தில் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வந்தது.

சமூகக் கிச்சன் மூலமாக கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலே அரசின் சார்பாக உணவு வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அதற்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கும் அரசு உத்தரவு வழங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்ததன் மூலம் மக்கள் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதற்குத் தேவையான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது, நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதேபோல, மருத்துவர்களுக்குத் தேவையான உபகரணங்களான என்.95 முககவசம், பிபிஇ-கிட் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன, போதிய கையிருப்பும் உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நம் மாநிலத்தில் தான் அதிக அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. பிசிஆர் கிட்டை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.