தற்போதைய செய்திகள்

நாகை செட்டிச்சேரி கடுவையாற்றின் குறுக்கே ரூ.16.27 கோடியில் கடைமடை இயக்கு அணை-அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூமிபூஜை

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம், செட்டிச்சேரி கிராமத்தில் கடுவையாற்றின் குறுக்கே ரூ.16.27 கோடி மதிப்பீட்டில் புதிய கடைமடை இயக்கு அணை கட்டும் பணியை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

“ வடுகச்சேரி கடைமடை இயக்கு அணை மூலம் இருக்கை, வடுகச்சேரி, செம்பியன்மகாதேவி, பாலக்குறிச்சி, சோழவித்தியபுரம், நீடுர், தன்னிலப்பாடி, கிராமத்தை போல் ஒரத்தூர், ராதாமங்கலம், ஆலங்குடி, ஆகிய கிராமங்களில் 20168 ஏக்கர் பாசன வசதி பெறும்.

உப்பு நீர் உட்புகுவதால் இப்பகுதியில் மண்வளம் மற்றும் நீர்வளம் மாற்றத்தால் விவசாயத்திற்கு பயன்படாமலும், நிலத்தடி நீரின் தன்மை மாற்றத்தால் எதிர்வரும் காலங்களில் குடிநீர் பஞ்சமும் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளன. இதனை தடுக்கும் நோக்கத்தில் கடுவையாற்றில் புதிய கடைமடை இயக்க கட்டுமான பணி மேற்க்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பாசன நீர் மற்றும் மழை நீரினை சேமிக்க இயலும்.

புதிய கடைமடை இயக்கு அணையில் உள்ள இயக்கு அணை ஏற்றி இறுக்குவதற்கு மின்மோட்டார் அறை கட்டடம் கட்டவும், கரை தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் மேற்க்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் பாண்டியன், கமலக்கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.