தற்போதைய செய்திகள்

நீடாமங்கலம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பேரூராட்சி தெற்குவீதியில் நடைபெற்ற மருத்துவ முகாமினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரகுடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இது போன்ற மருத்துவ முகாம்கள் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ முகாம் என்பது அந்தந்த பகுதிகளில் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்ளவும், மேலும் இம்முகாம்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா கொள்ளை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறிந்து கொரோனா நோய் தொற்றை விரட்டி அடிக்கும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது குறைவாக இருந்த நிலையில் பின்னர், கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக இருந்து தற்பொழுது வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலம் 1851 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1651 என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 176 மட்டுமே. அதாவது, நமது திருவாரூர் மாவட்டத்தினை பொறுத்தவரையில் 88 சதவீத நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மேலும், இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றுதல், கட்டாயம் முகக்கவசம்; அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவற்றை நாம் பின்பற்றிட வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் மரு.விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செந்தமிழ்செல்வன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் ஷாஜஹான், வட்டாட்சியர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.