தற்போதைய செய்திகள்

முன்கள பணியாளர்கள் பட்டியலில் தேர்தல் அதிகாரிகளை சேர்க்க நடவடிக்கை

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை கொரோனா தடுப்பூசிக்கான முன்களப்பணியாளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில இதுவரை 2 லட்சத்து 47ஆயிரத்து 342 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 2.10 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 22,856 முன்களப்பணியாளர்கள், 14,186 காவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மாநிலத்தில் 628 தடுப்பூசி மையங்கள் எனும் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளையும் முன்களப் பணியாளர்களாக பதிவு செய்யுமாறு மத்தியக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான பணி தொடங்கவுள்ளது.

இந்தியளவில் 10ல் ஒருவர் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. முதல்முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 28 நாட்கள் கழித்து இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். 28 நாள் இடைவெளி என்பதை ஒருநாள் முன்பின் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தாமதமாகும் போது, உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக காலதாமதம் ஆகும்.

இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.