தற்போதைய செய்திகள்

எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கரும் புள்ளி – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்

எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கரும் புள்ளி என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், அரித்துவார்மங்கலம் பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாமை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், சத்து மாத்திரைகள், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

நீடாமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.காமராஜ் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களில் சுமார் 78.55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 851 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்திய அளவில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67 சதவீதம். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டோர் 78.55 சதவீதமாக உள்ளது. சென்னையை பொறுத்தவரை 86.48 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
எஸ்.வி.சேகர் ஏற்கனவே கழக வேட்பாளராக இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோதும் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்த போது கழக கொடி தான் அவரது வாகனத்தில் இருந்தது. எஸ்.வி.சேகர் பேச்சு கண்டிக்கத்தக்கது.

அதிமுகவினரும் தமிழக மக்களும் எஸ்.வி.சேகரை மன்னிக்க மாட்டார்கள். எஸ்.வி.சேகரின் செயல் மிகவும் மோசமானது.பாரதிய ஜனதா கட்சியினரே எஸ்.வி.சேகரை பாஜக கட்சிக்காரர் என கூறுவதில்லை. திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு கூறுவது போல் நானும் ரவுடிதான் என எஸ்.வி.சேகர் கூறி வருகிறார்.பாரதிய ஜனதா கட்சிக்கு எஸ்.வி.சேகர் ஒரு கரும்புள்ளி. தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.