திட்டங்களை நிறைவேற்ற விடியா தி.மு.க. அரசு தடை – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் திட்டங்களை நிறைவேற்ற விடியா தி.மு.க. அரசு தடையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் குமாரசாமி பேட்டை வாரியர் திடலில் நடைபெற்றது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.பழனிசாமி தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்க கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, அமைப்பு சாரா மாநில இணை செயலாளர் சிங்கராயன், மண்டல தலைவர் சிவம், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் ஆட்சி வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்தோம். வத்தல்மலையில் ரூ.18.50 கோடி ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கப்பட்டது.
பின் ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. இயற்கை சீற்றங்களை தாண்டி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் எடப்பாடியார். தி.மு.க. அரசால் தாலிக்கு தங்கம், இலவச லேப் டாப், மிதிவண்டி அனைத்தும் நிறுத்தப்பட்டது.
மீடியாக்கள் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது.
ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டி முடித்தது கழக அரசு. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை ரூ.12 கோடியில் கட்டிக் கொடுத்த பெருமை எடப்பாடியாரை சேரும். புலிகரை, தூள் செட்டி ஏரி, எண்ணேகொல்புதூர் திட்டங்கள் நிறைவேற்ற தி.மு.க. அரசு தடையாக உள்ளது.
தமிழக மக்களுக்கு அனைத்து திட்டங்களை நிறைவேற்றியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் தான். தருமபுரியில் சிப்காட் ஆரம்பிக்கவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற காலதாமதம் செய்கிறார்கள் தி.மு.க.வினர்.
சட்டமன்றத்தில் எது பேசினாலும் பதிவு செய்வதில்லை. தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு கிடையாது.ஒரு திட்டத்திற்கு நல்ல பெயர் வருவதாக இருந்தால் தி.மு.க. அதை கையில் எடுத்து கொள்ளும்.
இல்லாவிட்டால் நம் மீது பழி போடுவார்கள்.ஓராண்டு காலமாக தருமபுரி மாவட்ட மக்களுக்கு எந்த திட்டமும் சேரவில்லை. அம்மா உணவகத்தில் அதிக விலைக்கு உணவு விற்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசினார்.