தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும்- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர்
தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. எனவே தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும் என்று சிவகாசியில் நடைபெற்ற மேதின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
தொழிலாளர்களை நம்பி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். நான் குண்டக்க மண்டக்க பேசுவேன். ஆனால் உண்மையைத்தான் சொல்வேன். தேனிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் மின்சாரத்தை காணவில்லை என மக்கள் புகார் அளித்துள்ளார்கள்.
கழக ஆட்சியில் மின் கம்பியில் அணில், காக்கா, குருவிகள் நின்றது. ஆனால் கரண்ட் கட் ஆகவில்லை. தி.மு.க. ஆட்சியில் மட்டும் மின் கம்பியில் அணில் நின்றால் மின்சாரம் தடைபடுகிறது. மக்கள் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு தி.மு.க. ஆட்சிக்கு அவமானம். இ.பி.எஸ். ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்பொழுது யூ.பி.எஸ்-ஐ தேடுகிறார்கள்.
கழக அரசின் அனைத்து திட்டங்களையும் நிறுத்திய தி.மு.க. அரசு புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை. வாக்களித்த மக்கள் வேதனையில் உள்ளார்கள். தி.மு.க.வினர் எதற்கு எடுத்தாலும் கவர்னரை குற்றம் சொல்லி வருகிறார்கள். கவர்னர் அதிகாரத்தில் யாரும் தலையிட கூடாது. கவர்னரை குற்றம் சாட்டிவிட்டு புகார் மனுவை அவரிடமே கொடுக்கிறார்கள்.
ஒன்றிய அரசு என சொல்லும் முதல்வர், ஒவ்வொரு மத்திய அமைச்சர்களிடம் உதவி கேட்கிறார். முதல்வர் தமிழகத்திற்குள் ஒரு பேச்சும், டெல்லி சென்று ஒரு பேச்சும் பேசுகிறார். தி.மு.க.வுக்கு வாக்கு வங்கியே கிடையாது. தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை குறைக்க வேண்டும்.
எல்லா பிரச்சினைகளுக்கும் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டினால் இங்குள்ள தி.மு.க. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. ஒரு பஞ்சாயத்து தலைவர் மாவட்ட கலெக்டரை பகைத்து கொண்டு வேலை பார்த்தால் பஞ்சாயத்தில் வேலை நடக்குமா? நடக்கவே நடக்காது. அடுத்த சட்டமன்ற தேர்தல் வந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் அண்ணா திமுக மாபெரும் வெற்றி பெறும்.
அரசியல் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் சொல்லட்டும். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இன்று எதிர்கட்சியாக இருந்த போதிலும் கூட கழகத்தின் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்கள் சாரை சாரையாக வருகின்றனர்.
மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் கொடி பிடிக்கின்ற தொண்டர்கள் நிரம்பிய கட்சி தான் அண்ணா தி.மு.க.. நாடு முழுவதிலும் பட்டாசு தொழிலில் 1 கோடி பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். பட்டாசு தொழில் இன்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.
பட்டாசு தொழிலை தி.மு.க. அரசு பாதுகாக்க தவறுகிறது. பட்டாசு விபத்து ஏற்பட்டால் ஆலை உரிமையாளர்களிடம் பேரம் பேசுகிறார்கள். சிவகாசியில் 80 பட்டாசு ஆலைகள் இயங்காமல் உள்ளன. இதனால் 5 ஆயிரம் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர். சீன பட்டாசு இறக்குமதியை ஊக்குவிக்க மறைமுக முயற்சி நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, கைத்தறி, பருப்பு கொள்முதல், நூற்பாலை, அச்சகம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. இதனை தி.மு.க. அரசு கண்டுகொள்வதில்லை. கழக ஆட்சியில் தான் பட்டாசு ஆலைகள் உள்ள அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டது. கழக ஆட்சியில் போடப்பட்ட இந்த சாலைகளை இன்று பராமரிக்க ஆள் இல்லை.
நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. தலைவர் கூறினார். ஆனால் கொடுத்த வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்யவில்லை. மக்களை வாட்டி வதைக்கும் வேலையை தான் தி.மு.க. அரசு செய்கிறது. ஓட்டு போட்ட மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
தி.மு.க. அரசு கழக தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்சினையில் காட்ட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் 110 விதியில் மக்களுக்கான திட்டங்கள் இதுவரை அறிவிக்கவில்லை. மானிய கோரிக்கைகளிலும் எந்த திட்டங்களும் அறிவிக்கவில்லை.
தமிழகத்தின் நிலவரம் கலவரமாக உள்ளது. தி.மு.க. ஆட்சி நல்லது செய்வதாக யாரும் சொல்வதில்லை. தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் கழக ஆட்சி விரைவில் மலர உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் கழகம் வெற்றி பெறும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.