தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சமூக விரோதிகள் கூடாரமாகி விட்டது-ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

மதுரை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவிட்டது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்புக்கு உருவம் கொடுத்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான். தொழிலாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கழக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்டது.

ஸ்டாலின் திண்டுக்கல் வந்த போது திண்டுக்கல் என்றால் தி.மு.க. என்று கூறுகிறார். ஆனால் 1972-ம் ஆண்டில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது தி.மு.க. ஆட்சியில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை.

பொதுவாக சட்டமன்றத்தில் இறந்த ஒருவரை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஆனால் சட்டமன்றத்தில் செல்வப்பெருந்தகை அம்மாவை பற்றி விமர்சனம் செய்துள்ளார். கருணாநிதி உயிரோடு இல்லை. அதனால் அவரை பற்றி நாங்கள் விமர்சனம் செய்யவில்லை.

செல்வப்பெருந்தகை மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பொதுவாக சட்டமன்ற கணக்கு கமிட்டி எதிர்க்கட்சிக்கு தான் வழங்க வேண்டும். ஆனால் காங்கிரசை சேர்ந்த செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த நன்றி கடனுக்காகத் தான் அம்மாவை பற்றி விமர்சித்திருக்கிறார். 2006-ல் செல்வபஙபெருந்தகை விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்தபோது அம்மாவின் தயவில் தான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் என்பதை மறந்து விட்டார்.

துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கக்கூடாது என்று தி.மு.க. சட்டமன்றத்தில் கூறி வருகிறது. ஏற்கனவே பல முறை தி.மு.க. ஆட்சி செய்யும் போது இது பற்றி ஏன் கூறவில்லை. தற்போது ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதத்தால் செய்து வருகின்றனர்.

கழக ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது ஸ்டாலின் 110 விதியின் கீழ் கலைஞர் நூலகம், கலைஞருக்கு மணிமண்டபம் என்று அறிவித்து வருகிறார். 110 விதியின் கீழ் தனது குடும்பத்திற்கு மட்டும் அறிவித்து வருகிறார்.

கழக ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் என்று நிதி அமைச்சர் கூறினார். தற்போது ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன்களை வாங்கியுள்ளனர். எந்த துறையிலும் தி.மு.க .அரசு வெற்றி பெற முடியவில்லை.

தமிழகத்தில் 11 மாதத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து சமூக விரோதிகள் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது.

ஜல்லிக்கட்டை யார் மீட்டெடுத்து என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு முயற்சி செய்தோம் என்று தி.மு.க. அமைச்சர் கூறுகிறார். ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தில் 60 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் எந்த டாக்டரும் மக்களின் வீட்டை தேடி வரவில்லை.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், சரோஜா, சசிகலாதேவி, ஓம்.கே.சந்திரன், ராமமூர்த்தி, கவுரிசங்கர், மரக்கடை முருகேசன், பாலகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.