சிறப்பு செய்திகள்

எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், பேசி விட்டு வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார் – முதலமைச்சர் பேட்டி

சென்னை

எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். பேசி விட்டு ஏதாவது வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

கேள்வி: திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் …

பதில்: அது அவர்களது உட்கட்சிப் பூசல். அதற்கும், எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

கேள்வி: நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுக-விற்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தான் அவர் பாரதீய ஜனதா கட்சிக்குச் சென்றார். அவர் எங்களுடைய கட்சிக்கு மீண்டும் வந்தால், நாங்கள் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம்.

கேள்வி: நடிகர் எஸ்.வி.சேகர் அதிமுக-வை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார், முதலமைச்சருக்குக் கூட இந்தி தெரியும் என்று பேசியிருக்கிறாரே?

பதில்: எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். அவர் முதலில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்? பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவரென்றால், அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவே இல்லையே. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்ற பாரதீய ஜனதாவும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தோம், அப்பொழுது அவர் எங்கும் பிரச்சாரத்திற்கு வரவேயில்லை. அதுமட்டுமல்ல, அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கொஞ்சம் நாள் இருந்தார்,அதிமுக-வைத் தானே புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால்தான் அம்மா அவர்களால் அவர் நீக்கப்பட்டார். எனவே, அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அவர் ஒரு பெரிய கட்சித் தலைவர் என்று நினைக்கவில்லை. ஏதாவது பேசுவார், பேசிவிட்டு ஏதாவது வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.