சிறப்பு செய்திகள்

பொதுமக்களுடைய ஒத்துழைப்பினால் தான் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் – முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

முழுக்க,முழுக்க பொதுமக்களுடைய ஒத்துழைப்பினால் தான் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

இது ஒரு புதிய நோய். உலகத்தில் சுமார் 210 நாடுகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. இந்தியாவில் தமிழகத்திலும் இந்த கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பரவியுள்ளதை கட்டுப்படுத்து வதற்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடிய தொற்று நோய் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதனைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் மற்றும் நம்முடைய மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளின்படி நம்முடைய மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதனால் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை பார்க்கிறோம்.

அதேபோல, இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் சதவீதம் குறைந்திருக்கிறது. குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க, முழுக்க பொதுமக்களுடைய ஒத்துழைப்பினால் தான் இந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடித்தால் இந்த நோய்ப் பரவலை படிப்படியாக குறைக்க முடியும், இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

இந்த நோய்த் தொற்றின் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், விரைவில் குணமடைந்து வீடு திரும்பலாம். இதற்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றவர்கள் புதிதாக அதிக அளவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவரையும் குணமடையச் செய்வதற்கான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மிக முக்கியம், மக்களைக் காப்பதுதான் அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் மீண்டும், மீண்டும் பொதுமக்களைக் பணிவன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம், அரசு அறிவிக்கும் வழிமுறைகளை நீங்கள் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.

இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் இறக்கக்கூடிய சூழ்நிலைகூட நேரிடலாம். மேலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால், மருந்தின் மூலம் குணப்படுத்த முடியாத சூழ்நிலையால் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வெளியில் சென்று வீடு திரும்பும்பொழுது கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.

வீட்டையும், வீட்டிலுள்ள கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். தெருக்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை அடிக்கடி கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தெருக்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை கடைபிடித்தால் நோய்ப் பரவலைத் தடுத்து, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.