தற்போதைய செய்திகள்

எளிமையான முறையில் அனைவருக்கும் இ-பாஸ் – முதலமைச்சர் உறுதி

சென்னை 

குற்றம் சொல்வது மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாக உள்ளது என்றும், எளிமையான முறையில் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்க மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மற்றும் மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரடியாகச் சென்று ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: –

இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்பவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்க ஏற்கனவே ஒரு குழு இயங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக ஒரு குழு ஆரம்பித்து, இரண்டு குழுக்கள் இயங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வழங்குவதில் எந்தத் தடையும் கிடையாது. ஆனால், உண்மையான காரணங்களுக்காக மட்டும் முறைப்படி இ-பாஸ் பெற்றுச் செல்லலாம்.

தொடர்ந்து இ-பாஸ் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதலமைச்சர் ஊழலுக்கு வழிவகுக்கக்கூடாது என்பதற்காகத்தான் கூடுதலாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு நிறுவனத்தில் 500 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அவர்கள் விண்ணப்பித்தால் மாவட்ட ஆட்சியர் அனுமதி தருகிறார். இதனை ஒரு மாதம் பயன்படுத்தி தொழிற்சாலைகளுக்கு அவர்கள் வரமுடியும். மீண்டும் இதனைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

எனவே இ-பாஸை பொறுத்தவரையில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தருகிறோம். அனாவசியமாக யாரும் செல்லக்கூடாது என்பதற்காகதான் இந்த கட்டுப்பாட்டை அரசு வைத்துள்ளது. இந்த கட்டுப்பாடு இருக்கும் காரணத்தினால்தான் மதுரையில் நோய் பரவல் படிப்படியாகக் குறைத்திருக்கிறோம். இன்றைக்கு எல்லோருமே போக ஆரமித்துவிட்டார்கள். அத்தியாவசிய பணிக்குச் சென்றால் தவறு கிடையாது. இதற்குத்தான் இ-பாஸ் முறையை வைத்துள்ளோம்.

இது ஒரு புதிய நோய். இந்த நோய் பரவலைத் தடுக்க பல வகையில் அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறோமே தவிர, மக்களுக்கு இடையூறு செய்வதற்காகவோ, கஷ்டப்படுத்துவதற்காகவே இல்லை என்பதை மக்கள் உணரவேண்டும். தேவையானவர்கள், அத்தியாவசிய பணிக்குச் செல்பவர்கள், முறையாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

எளிமையான முறையில் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும். கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.

எண்ணிக்கையை மறைத்துக் காட்டுவதால் அரசுக்கு என்ன லாபம்? அதிகமான பரிசோதனை செய்வதால் பாதிப்பு அடைந்தவர்களைக் கண்டறிந்து உடனடியாக அவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் குணமடையச் செய்கிறோம். இதனால் நோய் பரவல் தடுக்கப்படுகிறது. அவர்களுக்குப் பாராட்ட மனமில்லை. எதிர்க்கட்சிகள் அப்படிதான் பேசுவார்கள். என்றாவது உண்மையைத் தெரிவித்திருப்பார்களா?

இது ஒரு சவாலான நேரம், சோதனையான நேரம். 211 நாடுகள் என்ன செய்வது என்று திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில் குற்றம் சொல்வது மட்டுமே அவர்களுக்கு வாடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமா இந்த நோய் உள்ளது. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும்தான் உள்ளது. இன்றைக்கு ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானாவில் நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது. நாம் அதிகமாகப் பரிசோதனை செய்யும் காரணத்தினால் படிப்படியாக நோய் தாக்கம் குறைந்து வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.