தற்போதைய செய்திகள்

அரசு நிதி ஒதுக்கீட்டில் பயிலும் தனியார் பள்ளி மாணவா்களுக்கு ரூ.248 கோடி நிதி – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

தனியாா் பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டில் பயிலும் மாணவா்களுக்கு 248 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் தொகுதி நம்பியூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளைபள்ளி கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அத்திகடவு-அவிநாசி திட்ட பணிகளில் வரப்பாளையத்தில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சோலார் அமைக்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை தொடரும். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனையின் படி 12ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்படும். பாட புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவா்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் தான் வெளியிடப்பட்டு வருகிறது. நிலைமைகள் சரியான பின்பே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஆசிாியா்கள், பெற்றோா்கள், வருவாய்துறை, மருத்துவத்துறை என அனைவரது ஆலோசனைகளும் கேட்கப்பட்டு அதன்பின்னா் தான் பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது. 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும். 8ம் வகுப்பில் திறனாய்வு தோ்வெழுதிய மாணவா்களுக்கான முடிவுகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தனியாா் பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டில் பயிலும் மாணவா்களுக்கு 248 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிகளில் நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் தம்பி (எ)கே.ஏ.சுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கெளசல்யா தேவி, எலத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், கருப்பண்ண கவுண்டர், எம்.எம்.செல்வம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.