மக்கள்நல திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

புதுக்கோட்டை
கழக அரசில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் புதுக்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சாந்தநாதபுரத்தில் மேனதின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் செபஸ்தியான் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், கழக மாநில இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, தலைமை கழக பேச்சாளர்கள் எம்.ஜி.ஆர். ஈ.வெங்கடேசன், பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் இந்த தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அன்றைக்கு ஒரு ஆற்காடு வீராசாமி போல், இன்றைக்கு ஒரு செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார்.
11 அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை கழக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க கொண்டு வந்த திட்டம் போன்று அதை செயல்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு கழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டத்தை முடக்குவது எந்த விதத்தில் நியாயம்? என்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதை எப்படியும் சமாளிக்கும் தைரியம் எனக்கு உள்ளது. சமாளித்து வெற்றி பெறுவேன்.
இருப்பினும் கழக தொண்டன் மீது தி.மு.க. பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்தால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். ஆட்சி என்பது ஒரு குடை. மக்களை பாதுகாக்கும் குடையாக இருக்க வேண்டும்.
நிழல் குடையாக இருக்க வேண்டும். தி.மு.க.வின் ஆட்சியில் அனைத்து துறைகளும் செயலிழந்து விட்டது. சுட்டெரிக்கும் சூரியனால் பொதுமக்கள் எப்படி வாடி வதங்கி நிற்கிறார்கள். அதேபோன்று சூரியன் ஆட்சியிலும் பொதுமக்கள் வாடி வதங்கி நிற்கின்றனர். இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.