சிறப்பு செய்திகள்

23-ந்தேதி இடைக்கால பட்ஜெட்-துணை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்

சென்னை

தமிழக சட்டப்பேரவை 23-ந்தேதி மீண்டும் கூடுகிறது. அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவை கடந்த 2-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக, கலைவாணர் அரங்கில் போதிய சமூக இடைவெளியுடன் இக்கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. 3-ந்தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசினார்கள்.

5-ந்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகள் வாபஸ், புரட்சித்தலைவி அம்மா பெயரில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் பின்னர் சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடப்படாமல் பேரவையை சபாநாயகர் ப.தனபால் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் மீண்டும் பிப்ரவரி 23-ந்தேதி சட்டப்பேரவை கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேரவை செயலர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை 23,2,2021-ம் நாள் (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று முற்பகல் 11 மணிக்கு 2021-2022-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப் பெறும்.

இவ்வாறு பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

23-ந்தேதி இடைக்கால பட்ெஜட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 11-வது பட்ஜெட் ஆகும்.