தற்போதைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.4 கோடி மதிப்பீட்டிலான சி.டி.ஸ்கேன் கருவி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து பார்வையிட்டார்

கோவை

கோவை மாவட்டம், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.4 கோடி மதிப்பீட்டிலான சி.டி.ஸ்கேன் கருவியை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளித்து வரும் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனையானது, தமிழகத்திற்கே வழிகாட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இம்மருத்துவமனையில் 23.03.2020 முதல் மூன்று மாவட்டத்தைச் (கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி) சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு சி.டிஸ்கேன் கருவி பயன்பாட்டில் உள்ளது. இக்கருவியின் மூலம் இதுவரை 2,586 சி.டி ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.சி.டிஸ்கேன் பரிசோதனை என்பது கொரோனா வைரஸ் தொற்று நோயின் தீவிரத்தை அறியக்கூடிய அத்தியாவசியமான ஒரு பரிசோதனை என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிதாக ரூ.2.4 கோடி மதிப்பிட்டிலான சி.டி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இக்கருவியின் மூலம் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் அதிக அளவிலான பரிசோதனை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடியும்.சி.டி.ஸ்கேன் கருவியின் மூலம் நுரையீரல் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்ட 1,749 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இதில் 75 சதவீதத்திற்கும் மேல் நுரையீரல் பாதிப்பு இருந்தவர்களும் அடங்குவர்.

இதற்கு இம்மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடே காரணம் ஆகும். மேலும், 772 நுண்கதிர் நெஞ்சகப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. 65 கர்ப்பிணி பெண்களுக்கும் இங்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இ.எஸ்.ஐ மருத்துவமனையில், ஆர்டி மற்றும் பிசிஆர் ஆய்வகம் 18.04.2020 அன்று துவங்கப்பட்டு இதுவரை 31,880 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 1,770 மாதிரிகள் நோய்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாதிரிகளும் அடங்கும்.

குழந்தைகள் நலப்பிரிவில் 292 குழந்தைகள் நோய் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு இதுவரை 266 குழந்தைகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நோய் தொற்றுடைய 26 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் தொற்று அறிவதற்கான பிரத்யேகமான பரிசோதனைகள், 30 சதவீதத்திற்கு மேல் நுரையீரல் பாதிப்பு உடையவர்களுக்கு (சுமார் 1749) செய்யப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இம்மருத்துவமனையில் உள்ள 450 படுக்கைகளில் 340 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மேலும் 400 கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆக்ஸிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உணவுகளுமே தரமானதாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு, காலை 6.30 மணிக்கு பால் அல்லது அரிசி கஞ்சி(விருப்பப்படி), காலை 8.00 மணிக்கு கபசுர குடிநீர், காலை 8.30 மணிக்கு பொங்கல், இட்லி, ஊத்தப்பம், உப்புமா, வெங்காய ஊத்தாப்பம், பூரி, ரொட்டி, இடியாப்பம், ஏதேனும் இரண்டு வகை), தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், சுண்டல் மசாலா, காலை 10 மணிக்கு வைட்டமின் சி பானம், வாழைப்பழம், சாத்துக்குடி, காலை 10.30மணிக்கு இஞ்சி எலுமிச்சை சாறு, சத்துமாவு கஞ்சி, நண்பகல் 12 மணிக்கு மிளகு ரசம், மதிய உணவு 1மணிக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், காய்கறி பொரியல், அல்லது தக்காளி சாதம், தேங்காய் சாதம், காய்கறி நெய் சாப்பாடு(ஏதேனும் ஒன்று) மற்றும் தயிர்சாதம், ஒரு வேகவைத்த முட்டை, மாலை 4 மணிக்கு டீ, போன்விட்டா, காய்கறி சூப் மற்றும் சுண்டல், இரவு 8 மணிக்கு சப்பாத்தி, தோசை, கிச்சடி, தொட்டி, (ஏதேனும் இரண்டு) காய்கறி குருமா, சட்னி, சாம்பார், குழந்தைகளுக்கு பால், அரிசி கஞ்சி மற்றும் பிஸ்கட் எப்போது கேட்டாலும் வழங்கப்பட்டு வருகின்றது.

காலை, மதியம் மற்றும் இரவு உணவை தவிர இதர உணவு வகைகள் மற்றும் பானங்கள் அனைத்தும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள நவீன மயமாக்கப்பட்ட சமையல் கூடத்தில் சுகாதாரமான முறையில் தயாரித்து நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் வகைகள், உணவின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு உணவுகளை தரமானதாகவும், உரிய நேரத்திற்கு வழங்குமாறு மருத்துவமனை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) மரு.காளிதாசு, மாநகராட்சி உதவி ஆணையாளர் முருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.