தற்போதைய செய்திகள்

சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடாது – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஆவேசம்

நாமக்கல்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா அரசின் திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடாது என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழ.ராமலிங்கம் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கழக வழிகாட்டு குழு உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தொழிலாளர்கள் உயர வேண்டும், தொழிற்சங்கங்கள் உயர வேண்டும், அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள், அதன் உறுப்பினர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதன்முதலாக தொழிலாளர்களுக்கு ஒரு வாரியத்தை அமைத்துக் கொடுத்தார்.

கட்டிட தொழிலாளர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் சேர்த்து வேஷ்டி, சேலை, அங்கவஸ்திரம் வழங்கினார்.

ஆனால் தொழிலாளர்களின் ஆட்சி என்று கூறி கொள்ளும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலாளர்களுக்கு கழக அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை நிறுத்தினார்கள். நாங்கள் இதுபற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. தொழிலாளர்களை பாதுகாப்பது அம்மாவின் அரசு, எடப்பாடியார் அரசு தான்.

எப்படி தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பொதுமக்களை ஏமாற்றுகிறார்களா, அதேபோல் தொழிலாளர்களையும் ஏமாற்றுகிறார்கள். முதலில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்று கூறினார்கள். ஆனால் அம்மா வழங்கிய ஸ்கூட்டி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். நாங்கள் கேட்டால் பெண்கள் பஸ்சிலேயே இலவசமாக பயணிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

பணிக்கு செல்லும் பெண்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தார். அம்மாவின் மறைவுக்கு பின்னால் பாரத பிரதமரை அழைத்து வந்து இத்திட்டத்தை தொடங்கி மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தினோம். ஆனால் இப்போது தி.மு.க. அரசு இத்திட்டத்தை நிறுத்தி விட்டது. அம்மா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் நோக்கம்.

இந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க. அரசு என்ன செய்தது என்றால் அம்மா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான் இதில் முக்கியமானது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். இத்திட்டம் தொடர்ந்தால் மக்கள் அம்மாவையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதற்காக நிறுத்தி விட்டார்கள். அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மட்டுமே பணம் கொடுப்பதாக கூறியுள்ளார்கள்.

ஆனால் அம்மா அவர்கள் அப்படியா கூறினார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கொரோனா காலத்தில் 2000 மினி கிளினிக்குகளை கொண்டு வந்தார். இதில் அனைத்து கிராமப்புற மக்களும் பயன் பெற்றார்கள். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தவுடன் அதையும் நிறுத்தி விட்டார்கள்.

அதேபோல் லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தி விட்டார்கள். அம்மா உணவகத்தில் உள்ள அம்மா என்ற பெயரை மட்டும் எடுத்து விட்டு வெறும் உணவகம் என்று போட்டுள்ளார்கள். சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரத்து செய்வதால் கழக அரசின் சாதனைகளை மறைக்க முடியாது. கழக தொண்டர்கள் வெகுண்டெழுந்தால் என்ன நடக்கும் என்று இன்னும் தி.மு.க.வினருக்கு தெரியவில்லை.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, தொண்டர்கள் எழுச்சியுடன் வேலை செய்தால் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்த ஓராண்டு காலத்தில் திமுகவினர் ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை. கழக அரசு கொண்டு வந்த திட்டங்களை தான் இப்பொழுது தி.மு.க.வினர் திறந்து வைத்து கொண்டிருக்கின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றால் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி. இப்பொழுது வந்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை போல் கொள்ளையடிக்கும் கட்சி அல்ல. இந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க. அரசு 1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது.

இன்னும் 4 ஆண்டு காலத்தில் எவ்வளவு கடனை வாங்கி மக்களை எப்படியெல்லாம் சிரமத்திற்கு உள்ளாக்குவார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத ஆட்சி என்றால் கழக ஆட்சி தான் என்று இப்போது பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளனர். மின்வெட்டு ஆட்சி எது என்றால் அது தி.மு.க. ஆட்சி தான் என்பதையும் மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் சொத்து வரியை உயர்த்துகிறோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தோம். அப்போது சொத்து வரியை உயர்த்தவில்லை. அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளோம்.

நாங்கள் வரியை உயர்த்தியா இத்திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசின் நிதியிலிருந்து தான் இத்திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் இவர்கள் மத்திய அரசு கடிதம் அனுப்பி விட்டது. அதனால் வரியை ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று காரணம் கூறுகிறார்கள்.

ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தின்படி அனைத்து மாநிலங்களுக்கும் இவ்வாறு மத்திய அரசு கடிதம் அனுப்புவார்கள். அதை நாம் படித்து பார்த்துவிட்டு அப்படியே வைத்து விடுவோம். ஆனால் தி.மு.க.வினர் மத்திய அரசின் மீது குறை கூறி சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த வாக்காளர்களை வஞ்சித்துள்ளனர். அடுத்து தி.மு.க.வினர் மின் கட்டணத்தையும் உயர்த்தி மத்திய அரசு மீது பழி சுமத்துவார்கள்.

தி.மு.க.வின் அடிபிடி கட்சிகளாக அதன் தோழமை கட்சிகள் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியையே தி.மு.க.விடம் அடமானம் வைத்து விட்டார். மக்களுக்காக போராட கழகத்தை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்று தடுமாறி கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினர் நடக்காத ஒரு காரியத்தை மக்களிடம் வாக்குறுதியாக கொடுத்து விட்டு இன்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் இளைஞர், இளம்பெண்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக கல்லூரியில் வாங்கிய அனைத்து கல்விக் கடன்களும் ரத்து என்று கூறினார்கள்.

ஆனால் ரத்து செய்யவில்லை. ஏன் ரத்து செய்யவில்லை என்று கேட்டால் நிதி நிலைமை சரியில்லை என்று காரணம் கூறுகிறார்கள். நிதி நிலைமை என்ன என்று தெரிந்து தானே ஆட்சிக்கு வந்தீர்கள். கல்விக்கடன் பெற்றவர்கள் வீட்டிற்கு வங்கிகள் கந்து வட்டி வசூலிப்பது போல் செல்வது தான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்.எல்.ஏ. பேசினார்.