தற்போதைய செய்திகள்

மக்கள் தான் எஜமானர்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கிய தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு எஜமானர்களான மக்கள் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கழக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவம், தலைமை கழக பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், செல்வி டி.எமி, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தினந்தோறும் செய்தியை பார்க்கும் பொழுது குற்றங்கள் ராக்கெட் வேகத்தில் அதிகமாகி கொண்டே போகிறது என்பதை பத்திரிகையின் வாயிலாக காண முடிகிறது. அந்த அளவிற்கு மிக மோசமான ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏழை மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்வி பயில 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மா அரசு வழங்கியது. ஆனால் அதை தாங்கள் செய்ததாக போலியான ஒரு மாயையை உருவாக்கி மக்களிடம் தம்பட்டம் அடித்து வருகிறது தி.மு.க. அரசு.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கிய தாலிக்கு தங்கம் திட்டத்தின் மீது தி.மு.க அரசு கை வைத்துள்ளது. மக்கள் தான் எஜமானர்கள். இதற்கு விரைவில் தக்க தீர்ப்பு வழங்குவார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டில் என்ன சாதனை செய்தார்கள் என்பதை தி.மு.க.வினர் மக்கள் மேடையில் கூறட்டும். என்ன செய்தோம் என்று பட்டியலிட்டு கூற நாங்களும் தயார்.

தொழிலாளர்கள் இந்த தி.மு.க. ஆட்சியில் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக தீப்பெட்டி தொழிலாளர்கள். கடந்த ஒரு மாதமாக தொழில் செய்ய முடியாத வகையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது.

கடந்த அம்மா ஆட்சியின் போது தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்ட தருணத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை நான் நேரில் சந்தித்து தீப்பெட்டி தொழிலாளர்களின் கஷ்ட நிலை குறித்து எடுத்து கூறியவுடன் உடனடியாக டெல்லிக்கு எங்களை அனுப்பி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விவரத்தை அ.தி.மு.க சார்பில் எடுத்து கூறி 18 சதவீத வரியை 12 சதவீதமாக குறைத்து தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு வாழ்வளித்தது அம்மாவின் நல்லாட்சி தான்.
பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது கழகம் ஆட்சி தான்.

இப்போது தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த தி.மு.க.வுக்கு மே தினம் கொண்டாட அருகதை இல்லை.

தீப்பெட்டி தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் நான் எடுத்துக்கூறியும் இதுவரை தி.மு.க. அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியை கண்டு மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். மீண்டும் அம்மாவின் ஆட்சி உடனடியாக வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.