தற்போதைய செய்திகள்

கழகம் தொட முடியாத வானம் – இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் பேச்சு

சேலம்

கழகம் என்றென்றும் தொட முடியாத வானம் என்று இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் கூறினார்.

சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆத்தூரில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சித்துராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

மாநிலத்தின் தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. அத்தகைய தொழிலாளர் நலனுக்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை கழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ் தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டம் என்ற ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்திய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றால் அது மிகையாகாது.

கடந்த 10 ஆண்டு கால கழக ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும், தி.மு.க அரசு முடக்கி வருகிறது. எப்போதெல்லாம் தி.மு.க ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்வெட்டினால் தமிழக மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

கழக ஆட்சியின் போதுதான் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஏற்படுகிற மின்வெட்டு காரணமாக விவசாயிகள், நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என குற்றங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கே போதிய பாதுகாப்பு இல்லை.

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? கழக ஆட்சியின் போது குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்ற பின்பும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகிறது.

கடந்த 10 ஆண்டு கால கழக ஆட்சியில், எத்தனையோ இன்னல்கள், இடையூறுகள் வந்த போதிலும், பொறுமையுடனும், துணிச்சலுடனும் பிரச்சினைகளை எதிர்கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழக அரசை வெற்றிகரமாக நடத்தினார்கள்.

தமிழகத்தில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் அரசாக திகழ்ந்தது கழக அரசு தான் என்றால் அது மிகையாகாது. கோடிக்கணக்கான தொண்டர்களையும், லட்சக்கணக்கான நிர்வாகிகளையும் கொண்ட ஒரு மாபெரும் மக்கள் இயக்கமான கழகம் என்றென்றும் தொட முடியாத வானம்.

இவ்வாறு கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செலவ்ன் பேசினார்.