தற்போதைய செய்திகள்

ராசிபுரம் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மிக விரைவில் தொடக்கம்-அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்

ராசிபுரம் புதிய கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. அதேபோல சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகப்படுத்தி வருகிறோம். முதலமைச்சர் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய யாரெல்லாம் முன் வருகிறார்களோ அவர்களுக்கு உற்பத்திக்கான அனுமதி வழங்கப்படுகிறது. மத்திய அரசு அறிவிப்புக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக இயற்கை சக்திகளை பயன்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் நாமக்கல்லில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் போது ராசிபுரத்திற்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்தார். அதன்படி நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம் வெண்ணந்தூர், பரமத்தி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் பகுதிகளில் ரூ.932 கோடிக்கான புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நிறைவேற்றக்கூடிய திட்டங்களுக்கு மட்டுமே வாக்குறுதிகளை அளித்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மற்றவர்களை போல வாக்குகளுக்காக வாக்குறுதிகளை நாங்கள் கூறுவது கிடையாது. முதலமைச்சர் சொன்னதை செயல்படுத்தி காட்டியுள்ளார். கூடிய விரைவில் ராசிபுரம் புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.