தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளை போல பொய் வாக்குறுதிகளை அளித்து நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம்

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்

எதிர்க்கட்சிகளை போல நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற மாட்டோம் என்று

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி வட்டம், கோபால்பட்டியில் சாணார்பட்டி மற்றும் நத்தம் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி, தலைமையில், நத்தம் ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் 406 பெண்களுக்கு ரூ.1.53 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பில் 3.248 கிலோ தங்கம் மற்றும் 230 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஏழை எளியோர், ஆதரவற்றோர் என சமுதாயத்தில் அடித்தட்டு, மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார். அம்மா வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அம்மா செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சர், அரசால் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அளித்து, அதை நிறைவேற்றி வருகிறார். எதிர்க்கட்சியினரை போல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் செயலை முதலமைச்சர் ஒருபோதும் செய்வதில்லை.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி அமைப்போம் என்று பொய்யான வாக்குறுதியினை கடந்த ஆட்சியாளர்கள் அளித்துச் சென்றனர். ஆனால் முதலமைச்சர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரியை அறிவித்ததோடு, ரூ.327 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் வளர்ந்த பெருநகரத்தில் உள்ளதுபோல், மருத்துவ சிகிச்சையினை திண்டுக்கல் மாவட்ட மக்கள் பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படுகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றான அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை எளிய பெண்களுக்கான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 1025 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் காசிசெல்வி, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் சரவணன், அறங்காவலர் குழுத்தலைவர் பிரேம்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமராசு, அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.