தமிழகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட மையங்கள் – முதலமைச்சர் தகவல்

சென்னை

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் 1,200 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட மையங்கள் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பல்வேறு சங்கத்தினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதோடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசைப் பாராட்டியும், அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,23,460. குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2,14,815. இறந்தவர்களின் எண்ணிக்கை 4,461. 5.8.2020 அன்று மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,125. குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6,031 நபர்கள்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112. தற்போது, சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 54,184.அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 5.8.2020 வரை தமிழகம் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,45,406 நபர்கள். நேற்று மட்டும் நடைபெற்ற பரிசோதனைகளின் எண்ணிக்கை 59,156. தமிழகத்தில், அரசின் சார்பாக 60, தனியார் சார்பாக 65 என மொத்தம் 125 பரிசோதனை நிலையங்கள் இருக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்றைய தினம் வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,202 நபர்கள். குணமடைந்து வீடு திரும்பினார்கள் எண்ணிக்கை 2,603 நபர்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 59. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,578.திண்டுக்கல் மாவட்டத்தில் 5.8.2020 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 நபர்கள். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 22. நபர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை 2. தற்போது சிகிச்சைகள் உள்ளவர்களின் எண்ணிக்கை 540 நபர்கள். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,021. திண்டுக்கல் மாவட்டத்தில் பரிசோதனை நிலையம் ஒன்று உள்ளது.

கொரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,200க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்ககூடிய நிலையில் படுக்கை வசதிகளுடன் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தேவையான அளவில் உள்ளனர்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.