தற்போதைய செய்திகள்

கிராமங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப் படுத்த ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு:-

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ. 67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கோபி நகராட்சி, 1-வது வார்டில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளையாட்டு அரங்கினை வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்பாட்டிற்கு வழங்கி, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது;-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக விளையாட்டுத்துறைக்கென பல்கலைக்கழகத்தை உருவாக்கி வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், வெற்றிபெற்ற வீரர்களுக்கு தங்க பதக்கம், வெள்ளி பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரையில் பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து பிறகு அட்டவணை வெளியிடப்படும். 12,522 கிராம ஊராட்சிகள், 525 பேரூராட்சிகளில் இதுபோன்ற விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ. 67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டுக்களையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கங்கள் அமைக்க மத்திய அரசின் மூலம் நிதி கோரப்பட்டு, 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டமும் ஒன்று.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் கே.கே.காளியப்பன், கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரா.சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.