தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்-வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

மதுரை
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வருகின்ற தேர்தல் காலங்களில் தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரை திருநகரில் அவர் இறுதியாக வாழ்ந்து மறைந்த இடத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவது மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், மற்றும் நிர்வாகிகள் பன்னீர், செல்வகுமார், தனிக்கொடி, பிஆர்சி மாயி, எம்.ஆர்.குமார், மகாராஜன், கோட்டை காளை, பொன் முருகன், தவிடன், பாலமுருகன், கீழக்குடி செல்லக்கண்ணு, ராஜா கண்ணன், மணி, முத்துக்குமார், நாகரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு, புரட்சித்தலைவி அம்மா காலம் தொட்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தனது கடைசி காலம் வாழ்ந்து மறைந்த இடமான இந்த திருநகரில் அவர் திருருவப்படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செய்யப்படும். இப்போது கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இன்றைக்கு இந்த இயக்கம் வலுவோடு, பொலிவோடு உள்ளது. இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, அதுதான் கடந்த கால வரலாறு. திமுக ஆட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை, ஏற்கனவே பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்களை ஓசி என்று ஒரு அமைச்சர் கேலி பேசினார். தற்பொழுது பொது நிகழ்ச்சிகளில் பெண்களை வசை பாடுவதை தான் தி.மு.க வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
திமுகவில் வாரிசு அரசியல் தலை தூக்கி விட்டது. எப்படியாவது தனது மகன் உதயநிதிக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்ற திட்டத்தில் ஸ்டாலின் உள்ளார். மன்னராட்சியை ஒழித்து விட்டோம், ஆனால் வாரிசு அரசியலை ஒழிக்க முடியவில்லை. நிச்சயம் வருகின்ற தேர்தல் காலங்களில் இந்த வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
இன்றைக்கு இந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சாமானியனும் உழைத்தால் கட்சியில் உயர் பதவிக்கு வர முடியும், என்ற வரலாற்றை இந்த இயக்கம் படைத்துள்ளது. பேருறிஞர் அண்ணா, சாமானியன் குரல் கோட்டை கொத்தளத்தில் ஒலிக்க விடும் என்று கூறினார். இன்றைக்கு அண்ணா கண்ட கனவை இந்த இயக்கம் நிறைவேற்றி உள்ளது.
திமுகவில் அப்படி அல்ல, ஒரு கிளைச்செயலாளர் தலைமை பொறுப்புக்கு வர முடியுமா, ஏன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட ஆக முடியுமா, ஆனால் இந்த இயக்கத்தில் ஒரு கிளை செயலாளராக இருந்து, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இன்றைக்கு எடப்பாடியார் உயர்ந்துள்ளார். வருகின்ற தேர்தல் காலங்களில், திமுகவுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டி, மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் புனித ஆட்சியை மலர செய்வார்கள்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்ஏ. கூறினார்.