தற்போதைய செய்திகள்

நியாய விலைக்கடையில் விலையில்லா முகக்கவசம் – அமைச்சர்கள் க.பாண்டியராஜன், பா.பென்ஜமின் வழங்கினர்

திருவள்ளுர்

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, வைஷ்ணவி நகர் பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடையில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் அமைச்சர்கள் க.பாண்டியராஜன் மற்றும் பா.பென்ஜமின் செய்தியாளரிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் அவர்களின் ஆணை மற்றும் அறிவுறுத்தலுக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் 27.07.2020 அன்று தலைமைச் செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,06,572 குடும்பங்களைச் சேர்ந்த 6,73,168 நபர்களுக்கு நியாய விலைக்கடைகள் வாயிலாக முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் ஒரு நபருக்கு 2 முகக்கவசங்கள் வீதம் 6,73,168 நபர்களுக்கு 13,46,336 எண்ணிக்கையிலான விலையில்லா முகக்கவசங்கள் நேற்று முதல் வழங்கப்படவுள்ளது.ஆவடி மாநகராட்சியில் 90,495 குடும்ப அட்டைகளை பெற்ற 3,16,281 நபர்களுக்கு 6,33,000 விலையில்லா முகக்கவசங்களும், 4 நகராட்சிகளில் 57,149 குடும்ப அட்டைகளை பெற்ற 1,84,314 நபர்களுக்கு 3,68,628 விலையில்லா முகக்கவசங்களும், 10 பேரூராட்சிகளில் 58,928 குடும்ப அட்டைகளை பெற்ற 1,72,573 நபர்களுக்கு 3,45,146 விலையில்லா முகக்கவசங்கள் ஆக மொத்தம் மாவட்டத்தில் 2,06,572 குடும்ப அட்டைதாரர்களுக்கு 6,73,168 நபர்களுக்கு 13,46,336 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் மொத்த உள்ள மாநகராட்சி 14 நியாய விலை கடைகளும், 4 நகராட்சிகளில் 61 நியாய விலை கடைகளும், மற்றும் 10 பேரூராட்சிகளில் 54 நியாய விலை கடைகளும் ஆக மொத்தம் 129 நியாய விலை கடைகளில் முதல் கட்டமாக விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சர்கள் க.பாண்டியராஜன் மற்றும் பா.பென்ஜமின் ஆகியோர் கூறினர்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உட்பட்ட மாவட்ட, நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.