தற்போதைய செய்திகள்

பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க முடியாத இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

சென்னை

பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க முடியாத இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகமானோருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் நேற்றைய தினம் சுமார் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனால் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இ-பாஸ் வழங்குவதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளை எளிமை ஆக்குவதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவுடன் கூடுதலாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிமையாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க முடியாத இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றும் அதற்குரிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மும்மொழி கொள்கை நாடு முழுவதும் இருந்த போதும் அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா வழிகளை பின்பற்றி தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், இதுவே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.