தமிழகம்

கழகத்தில் மட்டுமே மகளிருக்கு முன்னுரிமை-முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

தேர்தலில் பங்களிப்பை அதிகப்படுத்த பூத் வாரியாக குழு அமைப்பு, கழகத்தில் மட்டுமே மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

இந்தியாவிலேயே மகளிர்க்கு என தனி அமைப்பை ஏற்படுத்திய கட்சி கழக கட்சி தான். தேர்தல் நேரத்திலே சிறப்பான பணியை செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பூத்திலும் மகளிர் அமைப்பை ஏற்படுத்தி இந்த கழகத்திற்கு வலு சேர்க்கின்ற பணியை இந்த மாவட்ட கழக நிர்வாகிகள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை தேர்தல் நேரத்திலே பூத் வாரியாக மகளிர் குழு அமைக்கப்பட்டது கிடையாது. முதன்முறையாக இந்த தேர்தலில் மகளிருடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக கழகம் மகளிருக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களும் இந்த தேர்தல் பணியிலே ஈடுபடுகின்ற சூழலை நாங்கள் உருவாக்கி தந்திருக்கின்றோம்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினார். அம்மா அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்திலே அறிவித்தார்.

அம்மா அவர்கள் மறைந்தாலும், அம்மா அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற விதமாக நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலிலே பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்து, அம்மாவுடைய வாக்குறுதியை நிறைவேற்றிய அரசு கழக அரசு.

பெண்கள் தலைமையேற்று நிர்வாகிக்க கூடிய பொறுப்பு சிறப்பாக இருக்கும் என்று அம்மா அவர்கள் எண்ணினார். அம்மா எண்ணியதை அம்மாவுடைய அரசு நிறைவேற்றி இருக்கிறது.

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற துறை உள்ளாட்சித் துறை. தினந்தோறும் மக்கள் உள்ளாட்சி துறை மூலமாக பல்வேறு பயன்களை பெற்று வருகிறார்கள். மக்களின் அடிப்படை தேவைகள் உள்ளாட்சி துறை மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால் அதன் நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும்.

அதை தான் அம்மா அவர்கள் எண்ணினார். அதன்படி மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் வேண்டும் என்று அறிவித்தார். அதனை அம்மாவுடைய அரசு நிறைவேற்றி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஏழை எளிய குடும்பங்களில் பிறந்த பெண்கள் திருமண வயதை அடைகின்ற போது, பொருளாதார சூழ்நிலை காரணமாக திருமணம் தடைபடுகின்றது. அதை களைய வேண்டும் என்பதற்காக அம்மா அவர்கள், திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 திருமண நிதியுதவி வழங்கினார்.

அதுமட்டுமல்ல அவர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் அம்மா அவர்கள் நடைமுறைப்படுத்தினார். 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்ததை 2016 சட்டமன்ற தேர்தலின் போது 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார். அம்மா அவர்கள் மறைந்தாலும், அம்மாவின் அரசு தாலிக்கும் தங்கம் திட்டத்தில் 8 கிராம் தங்கத்தை வழங்கி வருகிறது.

ஒரு பவுன் 37,000 ரூபாய், இந்த நிதியாண்டிற்கு தமிழகம் முழுவதும் 99,000 பேர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை 16-ந்தேதி துவக்கி வைத்தேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்று தங்கம் கொடுத்த வரலாறு கிடையாது. அந்த வரலாற்றை படைத்துக் கொண்டு இருக்கின்ற அரசு அம்மாவுடைய அரசு.

திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டங்களை ஏழை மக்களுக்கு வழங்கினார்களா என சிந்தித்துப் பாருங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார். அதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடைபிடித்து காட்டினார்.

அதே வழியில் வந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னென்ன கனவு கண்டார்களோ, அதை எல்லாம் நனவாக்கும் வகையில் இத்தகைய திட்டங்களை கொண்டு வந்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட கனவை அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.