தற்போதைய செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதம் 3 கிலோ ஊட்டச்சத்து மாவு பொட்டலங்கள் – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கி துவக்கி வைத்தார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதம் 3 கிலோ ஊட்டச்சத்து மாவு பொட்டலங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1375 உடல் நலம் குன்றிய ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதம் 3 கிலோ ஊட்டச்சத்து மாவு பொட்டலங்களை அமைச்சர் கே.சி.வீரமணி பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், இந்தியாவிலேயே சிறப்பு கவனம் செலுத்தி அதிக திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக தற்போது பெண்கள் தைரியமாகவும் சுயமாகவும் குடும்பத்தை வழி நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்து வருகின்றார்கள். மகளிருக்கு வங்கிகள் மூலமாக கடனுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி, பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள், உழைக்கும் மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர், ஆதரவற்ற தாய்மார்களுக்கு விலையில்லா ஆடு மாடுகள் வழங்கும் திட்டம். இதுபோன்ற திட்டங்களை இன்றளவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

புரட்சித்தலைவி அம்மா வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். மக்கள் இந்த பெரும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக வாழ்ந்திட தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்.

அதனடிப்படையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மூலம் ஆதரவற்ற தாய்மார்கள் பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்டு தனியாக வாழ்ந்து வருபவர்களும் தொற்று நோய் காலத்தில் உடல் ஊட்டச்சத்து குறைபாடினால் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க வேண்டி உடல் நலம் குன்றிய முதியோர்கள் 1375 நபர்கள் கண்டறியப்பட்டு மாதம் தலா 3 கிலோ ஊட்டச்சத்து மாவு 2020 ஆகஸ்ட் மாதம் முதல் 2021 ஜூலை வரையில் மாதம் மாதம் வழங்கப்படுகின்றது. இதில் சரிவிகித ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. இவற்றை தொடர்ந்து நாள்தோறும் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாகவும் எவ்வித நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இத்திட்டத்திற்கென திருப்பத்தூர் மாவட்டத்தில் 1375 பயனாளிகள் ஆலங்காயம் நாட்றம்பள்ளி கந்திலி சோலையார்பேட்டை திருப்பத்தூர் மற்றும் மாதனூர் வட்டாரங்களிலும் ஆம்பூர் நகராட்சி வாணியம்பாடி நகராட்சி மற்றும் திருப்பத்தூர்; நகராட்சி பகுதிகளிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த சத்து மாவானது 1 கிலோ பாக்கெட்டுகளாக வடிவமைக்கப்பட்டு மாதம் 3 பாக்கெட்டுகளாக வழங்கப்படும். இந்த சத்துமாவு வேலூர் இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தயார் செய்யப்பட்டு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் விநியோகிக்கப்படும்.