சிறப்பு செய்திகள்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை அழைத்து வரலாம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனசாமி தகவல்

சென்னை

வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியதாவது.

தமிழ்நாட்டில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பவேண்டும் என்று விண்ணப்பித்தவர்களை, அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அரசின் செலவிலேயே ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளோம். கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் காரணமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்ற வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் பணிபுரிய விருப்பப்படுவதாக தொழில் நிறுவனத்தினர் தெரிவித்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்ற உத்தரவும் அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு வருகை தரும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்து, பாசிட்டிவ் என்றால், அரசால் உரிய சிகிச்சை அளிக்கப்படும், நெகட்டிவ் என்றால், நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, அரசின் வழிகாட்டுதல்களின்படி பணியில் அமர்த்திக் கொள்ளலாம்.

இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வழங்குவதில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாதவாறு தெளிவான உத்தரவை அரசு வழங்கியுள்ளது. இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம். அவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை அளித்தால், மாவட்ட ஆட்சித்தலைவர் இ-பாஸ் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். மாதம் ஒருமுறை அதை புதுப்பித்தால் போதும்.

அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்பவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்க ஏற்கனவே ஒரு குழு இயங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக ஒரு குழு அமைத்து, இரண்டு குழுக்கள் இயங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் வழங்குவதில் எந்தத் தடையும் கிடையாது. ஆனால், உண்மையான காரணங்களுக்காக மட்டும் முறைப்படி இ-பாஸ் பெற்றுச் செல்லலாம்.இவ்வாறு பேசினார்.