தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராவது உறுதி -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73- வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ். குளத்தில் மாவட்ட கழக அவைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான விசி.ஆறுக்குட்டி ஏற்பாட்டின் பேரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 1000 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைப் பெண்கள் வளைகாப்பு நடத்த முடியாமல் சிரமப்படுவதை அறிந்து, தாயாக நான் இருந்து வளைகாப்பு நடத்துகிறேன் என்று முதன் முதலில் சமுதாய வளைகாப்பை துவக்கி வைத்தவர் நமது புரட்சித்தலைவி அம்மா. கழகம் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து செய்கின்ற ஒரே கட்சி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்ற திமுகவினர் இதுவரை தொகுதி மக்களை சந்திக்கவில்லை. ஆனால் பொதுமக்களை தினந்தோறும் சந்தித்து அவர்களின் குறைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றியும், மக்களுக்கு எது தேவையோ அதை சொல்லாமல் நிறைவேற்றும் ஒரே கட்சி கழகம் மட்டுமே.

அறிவித்த திட்டங்களை மட்டுமல்ல மக்கள் எதிர்பார்க்கும் மக்கள் நலன் காக்கும் திட்டங்களையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். சாதாரண கிளை செயலாளராக இருந்து முதலமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனைத்து தரப்பு மக்களையும் பற்றி தெரியும். ஆகவே ஏழை எளிய மக்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் நிறைவேற்றி வருகிறார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவரோ ஒரு அறைக்குள் இருந்து கொண்டு தலைக்கு அலங்காரம் செய்துகொண்டு மக்களை சந்திக்காமல் பொய்களை மட்டும் பேசி வருகிறார். புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேரடியாக மக்களை சந்திக்கிறார்.

தமிழக முதல்வர் விவசாயிகளின் பயிர்கடன் 12,110 கோடி தள்ளுபடி செய்து விவசாயிகளின் பாதுகாவலராக திகழ்கிறார். 2 ஆயிரம் மினி கிளினிக், தாலிக்கு தங்கம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி, மிதிவண்டி என பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மீண்டும் முதல்வராக
வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆகவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ். பி.வேலுமணி பேசினார்.