தற்போதைய செய்திகள்

ஆட்டோ ஓட்டுநர்களின் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்

புதுச்சேரி

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆட்டோவுக்கான அனுமதியை தற்போது வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களின் துயர் துடைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் முதலமைச்சர் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் அளித்தார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்டோ ஓட்டும் தொழில் புரிந்து வருகிறார்கள். கடன் வாங்கியும், ஆட்டோ வாடகைக்கு எடுத்தும் பல ஆட்டோ தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் இத் தொழில் புரிந்து வருகிறார்கள்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அதற்கான பெர்மிட் அவசியமான ஒன்றாகும். அவ்வாறு ஆட்டோ பெர்மிட் இல்லாத சூழ்நிலையிலும் தற்போது குடும்ப வறுமை கருத்தில் கொண்டு வாடகை ஆட்டோ ஓட்டும் போது காவலர்களால் தடுக்கப்பட்டு அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிப்பதோடு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஒட்டும் தொழிலாளர்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படவில்லை.

25 வயதை கடந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆட்டோ ஒட்டுவதற்கு உரிய பெர்மிட் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ஆட்டோ பெர்மிட் வைத்துள்ளவர்களின், பெர்மிட் மூலம் ஒட்டப்படும் ஆட்டோக்களுக்கு பெர்மிட் மீண்டும் புதுப்பிக்க பெர்மிட் உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் அதிக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.

மேலும், ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோவை புதுப்பித்து (எப்சி) எடுக்கும் போது ஏற்படும் கால தாமதத்திற்கு தினசரி ரூ.50 அபராதம் விதிக்கின்றனர். அவ்வாறு ஆட்டோவுக்கு எப்சி எடுக்கும் போது 2 மாத காலம் அபராதம் இல்லாத அனுமதி வழங்கிடவும் அதுவரை அபராதத் தொகையை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனவே முதலமைச்சர் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆட்டோ பெர்மிட்டை, தற்போது வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களின் துயர் துடைக்க வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

கடிதம் கொடுக்கும் போது மாவட்ட ஆட்சியர் வல்லவன், புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உடனிருந்தார்.