தற்போதைய செய்திகள்

234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்-கழக வர்த்தக அணி சூளுரை

சென்னை

234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் வெற்றிக்கு பாடுபட கழக வர்த்தக அணி சூளுரைத்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறுவது குறித்தும் கழக வர்த்தக அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜி.சங்கர், தென்சென்னை வடக்கு (மேற்கு) வர்த்தக அணி செயலாளர் வி.சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.வி.சாரதி வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கழக நிரந்தர பொதுச் செயலாளர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்த நாளை வருகிற 24-ந் தேதி தமிழ் நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாணவ செல்வங்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக வர்த்தக அணியின் சார்பில் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழ் நாடு முதன்மை மாநிலமாக உயர அரும்பாடுபட்ட கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு கழக வர்த்தக அணி தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

உலகமே கொடிய கொரோனா நோயின் பிடியில் சிக்கி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி அதற்கான ஏற்பாடுகளையும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக தொற்றின் தாக்கத்தை 95 சதவீதம் குறைத்து தனது சீரிய முயற்சியினால் அயராது செயல்பட்டு, தமிழக மக்களின் உயிர்களை காப்பாற்றிய பெருமை முதலமைச்சருக்கே உரித்தாகும்.

மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு கழக வர்த்தக அணியின் சார்பில் பாராட்டுதல்களையும், நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, ஒட்டுமொத்த விவசாயிகளின் ஏகோபித்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்றதோடு, தொடர்ந்து விவசாயிகளின் நலன் கருதி, விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியும்; 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியமைக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசுத் தொகுப்பும்,

ரொக்கமும் வழங்கி வந்ததைப் போல், தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கியும், ஏழை, எளிய மக்களின் பாதுகாவலராகத் திகழும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு, கழக வர்த்தக அணி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கிறது.

கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் ரூ.6,85,071 கோடி. இதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் 19,26,437. கடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பெறப்பட்ட ஒப்பந்தங்கள் 81 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.28,053 கோடியில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு 16.2.2021-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 68,775 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியீடு. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு 1949-ல் இருந்து பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ.1000 கோடி நிதியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தொழில்பேட்டைகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.500 கோடியில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலீட்டு மானியம் ரூ.25 லட்சம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை என தற்போது வழங்கப்பட்டு வருவதை, இனி அது மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு தொழில்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்து, தமிழ்நாட்டில் வர்த்தகம் மேம்பட செய்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக வர்த்தக அணி தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

நடைபெற இருக்கின்ற (2021-ம் ஆண்டு) சட்டமன்ற தேர்தலில் கழகம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறவும், தீயசக்தி தி.மு.க.வை விரட்டியடித்து மூன்றாவது முறையாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு, ஆட்சியை நிலைநாட்டி, அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் கூறியது போல் எனக்கு பின்னாலும் இந்த ஆட்சியும், கட்சியும் தமிழக மக்களுக்கு 100 ஆண்டுகள் கடந்தும், மக்கள் பணி செய்யும் என்று பேசிய வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு முதலமைச்சரின் நல்லாட்சி பற்றிய செய்திகளை நாம் சந்திக்கும் மக்களிடம் எடுத்து சொல்லி மீண்டும் அம்மா ஆட்சி அமைய பாடுபடுவது என்று கழக வர்த்தக அணி உறுதி எடுத்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.