தற்போதைய செய்திகள்

சிங்காரவேலரின் திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

சென்னை

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களுடைய பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பிறந்த தினமான பிப்ரவரி 18-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று காலை 10 மணியளவில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், மீன்வளத்துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.சீதாலட்சுமி, கூடுதல் இயக்குநர்கள் கி.சாந்தி (செய்தி), க.சண்முகசுந்தரம் (மக்கள் தொடர்பு), இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.