தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம்-அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் முடிவு

சென்னை

ஆட்டோ ஓட்டுநர்களிடம் 10 மடங்கு அபராத தொகையை வசூலித்து அரசின் கஜானாவை நிரப்பும் செயலையும் அவர்களின் வருமானத்தை அபராதம் என்ற பெயரில் அனைத்தையும் சுரண்டி அவர்களின் குடும்பங்களை வறுமையின் எல்லைக்கு கொண்டு சென்ற இந்த விடியா தி.மு.க. அரசை கண்டித்து, மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைவர் தாடி ம.இராசு தலைமையிலும், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையிலும், அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலக வளாகத்தில் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துப்பிரிவு மாநில செயலாளர் எஸ்.பழனி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள் ஏ.ஏ.அர்ஜுனன், ஏ.சோமசங்கரன், இ.எஸ்.சதீஷ்பாபு, எல்ஐசி டி.ஜெயச்சந்திரன், என்.வெங்கடேஷ் மற்றும் வடசென்னை அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க செயலாளர் ஆர்.தேவராஜ், தென்சென்னை அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க செயலாளர் ஜி.பன்னீர்செல்வம், சென்னை புறநகர் மனோகரன் மற்றும் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். முடிவில் பேரவை பொருளாளர் எம்.அப்துல்அமீது நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கழகத்தின் 51வது ஆண்டு துவக்க விழாவை தமிழகம் முழுவதும் வெகு சிறப்புடன் மாவட்டம் வாரியாக கொண்டாடி, பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கியும், மிகவும் விமர்சையாக செய்திட்ட கழக இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக, அண்ணா தொழிற்சங்க பேரவை கோடானு கோடி நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை மற்றும் அனைத்து மாநகரங்களிலும் ஓலா, ஊபர் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால், ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானமும், வாழ்வாதாராமும் மிகவும் சீர்குலைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போல, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொற்ப தவறுக்காக 10 மடங்கு அபராதத்தொகையை வசூலித்து அவர்களின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆட்டோ ஓட்டுநர்களிடம் 10 மடங்கு அபராத தொகையை வசூலித்து அரசின் கஜானாவை நிரப்பும் செயலையும் அவர்களின் வருமானத்தை அபராதம் என்ற பெயரில் அனைத்தையும் சுரண்டி அவர்களின் குடும்பங்களை வறுமையின் எல்லைக்கு கொண்டு சென்ற இந்த விடியா தி.மு.க. அரசை கண்டித்து, மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

சென்னை மற்றும் அனைத்து மாநகரங்களிலும் அண்ணா தொழிற்சங்கத்தினரால் அரசு அனுமதியுடன் அமைக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தங்களை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து ஆளுங்கட்சி ஆட்டோ தொழிற்சங்கத்தினரின் ஆதிக்கத்தால், ஆட்டோ நிறுத்தங்களை அடித்து நெருக்குவதும், பெயர் பலகைகளை பெயர்த்து எரிவதையும், அண்ணா தொழிற் சங்கத்தினரை கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க. ஆட்டோ நிறுத்தங்களாக மாற்றுவது போன்ற அராஜக நடவடிக்கைகளை செய்து வருவதையும், விடியா தி.மு.க. அரசின் ஆட்டோ தொழிற் சங்கத்தினையும் இதை அனைத்தையும் காவல்துறையிடம் தொடர்ந்து புகார் கொடுத்தும், கண்டு கொள்ளாத காவல்துறையையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.