தற்போதைய செய்திகள்

11,287 பேருக்கு ரூ.85.30 கோடியில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் வழங்கினர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோர் வழங்கினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பத்தூர் தொகுதியில் ரூ.23.64 கோடி மதிப்பீட்டில் 3196 பயனாளிகளுக்கும், ஜோலார்பேட்டை தொகுதியில் ரூ.20.46 கோடி மதிப்பீட்டில் 3098 பயனாளிகளுக்கும், வாணியம்பாடி தொகுதியில் ரூ.31.18 கோடி மதிப்பீட்டில் 2694 பயனாளிகளுக்கும், ஆம்பூர் தொகுதியில் ரூ.10.01 கோடி மதிப்பீட்டில் 2299 பயனாளிகளுக்கும் என ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் என்சிஈ.தங்கையாபாண்டியன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனாகர்க், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குர் உமாமகேஷ்வரி, பண்டக சாலை தலைவர்கள் கே.ஜி.ரமேஷ், அச்சக தலைவர் டி.டி.குமார், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.